தென்காசியில் இருந்து புறப்படும் கேரள அரசு பஸ்கள் விதிமுறைகளை மீறி ஓட்டல்களில் நிறுத்தம்: ஆசிரியர்கள், அலுவலர்கள் பாதிப்பு

தென்காசி: தென்காசியில் இருந்து புறப்படும் கேரள மாநில அரசு பேருந்து விதிமுறைகளுக்கு புறம்பாக உணவகங்களில் நிறுத்தப்படுவதால் காலையில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தென்காசி பகுதி தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அலுவல்கள், பணிகள், தொழில்கள், வேலை வாய்ப்பு காரணமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இரு மாநில போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் கேரள மாநில அரசு பேருந்துகள் அதிக அளவில் தென்காசியிலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படுகிறது. இதில் காலை வேளையில் இயக்கப்படும் குறிப்பிட்ட ஒன்றிரண்டு பேருந்துகள் அதில் பயணம் செய்யும் பயணிகள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத வகையில் உணவகங்களில் நிறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அதாவது தென்காசியில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி செல்லும் கேரள மாநில அரசு பேருந்து தென்காசியில் இருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு செல்கிறது. இந்தப் பேருந்து புளியரை மற்றும் எஸ்.வளைவு பகுதிகளிலுள்ள உணவகங்களில் 8.50 மணி முதல் 9.10 வரை உணவுக்காக நிறுத்தப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட இந்த பேருந்து கேரளாவில் இருந்து காலை 7.45 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் வருகிறது. அங்கு அரை மணி நேரம் தங்கலுக்கு பிறகு 8.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த பேருந்தை இயக்கும் டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோர் தங்களது காலை உணவை எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரம் தென்காசியிலேயே கிடைக்கும் நிலையில் அவர்கள் அதனை தவிர்த்து பேருந்து புறப்பட்டுச் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாகவே புளியரை பகுதி உணவகங்களில் நிறுத்துவது பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட அந்த பேருந்தில் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தோட்டங்கள், தமிழ்வழி பள்ளிக்கூடம், வங்கிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிகின்றவர்கள் பயணம் செய்கின்றனர். காலை வேளை என்பதால் இவ்வாறு உணவகங்களில் நிறுத்தப்படும் 20 நிமிட இடைவெளி ஒவ்வொருநாளும் அவர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்று புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கேரள மாநில அரசு போக்குவரத்து கழகம் கொல்லம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் புகார் கொடுத்தும். செவிசாய்க்கவில்லை போக்குவரத்துக் கழகங்களில் இதுகுறித்து புகார் கொடுத்தபோது அவ்வாறு உணவகங்களில் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட பேருந்தின் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் அதுபோன்று நிறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியதன் பேரில் கடந்த இரண்டு வாரங்களாக பேருந்துகள் உணவகங்களில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது இரண்டு தினங்களாக மீண்டும் உணவகங்களில் நிறுத்த துவங்கிவிட்டனர். இதனால் அதில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மீண்டும் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தென்காசியில் இருந்து கொட்டாரக்கரை செல்லும் பேருந்தில் ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து வேறு வேறு பேருந்துகளை பிடித்து கிராமங்களுக்கு பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலை வேளையில் 20 நிமிடம் உணவகங்களில் நிறுத்துவதால் மேற்கண்ட ஊர்களில் இருந்து புறப்படும் வெவ்வேறு பேருந்துகளை தவறவிட வேண்டிய சூழல் உள்ளது.

இதுகுறித்து டிரைவர் மற்றும் நடத்துனரிடம் எடுத்துக்கூறியும், பல்வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி குறிப்பிட்ட அந்த பேருந்தை மட்டுமாவது குறிப்பாக காலை வேளையில் மட்டுமாவது உணவகங்களில் நிறுத்தாமல் செல்வதற்கு உள்ள ஏற்பாட்டை செய்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: