குமரியில் 2019ல் விபத்தில் 211 பேர் பலி: 1,402 பேர் கை, கால்களை இழந்தனர்... உயிரிழந்தவர்களில் இளைஞர்கள் அதிகம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த 2019ல், விபத்தில் 211 பேர் பலியாகி உள்ளனர். 1,402 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாகனங்களின் பெருக்கத்துக்கேற்ப சாலை வசதிகள் இல்லை. தரம் குறைந்த, மோசமான நிலையில் உள்ள சாலைகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் மக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது. பாதசாரிகள் செல்வதற்கு முக்கிய சாலைகள் பிளாட்பார வசதிகள் இல்லை. மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாகர்கோவில், மார்த்தாண்டம் போன்ற நகரங்களில் விபத்துக்கள் தினம், தினம் அரங்கேறிய வண்ணம் உள்ளன. முக்கிய வர்த்தக பகுதிகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லை. சாலைகள் நெருக்கடியால் திணறுகின்றன. இதே போல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

Advertising
Advertising

ரோடுகளில் உள்ள பாதாள குழிகள், மக்களின் உயிரை பறித்த வண்ணம் உள்ளது. இது போன்ற பிரச்சினைகள் ஒருபுறமிருக்க பைக்குகளில் அதி வேகம் பயணம், குடிபோதையில் பைக், கார் ஓட்டுதல் போன்றவற்றால் விபத்துக்களும், உயிர் பலிகளும் தொடர் கதையாகி உள்ளன. குறிப்பாக 20 ல் இருந்து 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை ஆண்டுக்கு 160, 170 என இருந்த விபத்து இறப்பு விகிதம், படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 200, 250 ஆகி உள்ளது.  2016ல் மட்டும் 307 பேர் விபத்தில் உயிரிழந்து இருக்கிறார்கள். 2017ல் 267 பேரும், 2018ம் ஆண்டு 221 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டும் விபத்துக்களுக்கு பஞ்சமில்லை. கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1,421 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 193 விபத்துக்களில், உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் 211 பேர் பலியாகி உள்ளனர்.

இவர்களில் இளைஞர்கள் 55 சதவீதம் என்பது  மிகவும் வேதனையான ஒன்றாகும். காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 1,402 பேர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கை, கால்களை இழந்து தற்போது செயல் இழந்தவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணம் அதி வேகம் மற்றும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதே ஆகும். இறந்தவர்களின் அதிகம் பேர் தலைக்காய மரணங்களால் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் 43 சதவீத விபத்துக்கள் நடந்துள்ளன. நடந்து சென்றவர்கள், சாலையை கடக்க முயன்றவர்களும் விபத்தில் உயிரிழந்து இருக்கிறார்கள். 2019 ம் ஆண்டில் மே மாதம் வரையிலான 5 மாதங்களில் 592 விபத்துக்கள் நடந்து இருந்தன. இதில் 88 பேர் உயிரிழந்தனர். 520 பேர் காயம் அடைந்தனர். பின்னர் 7 மாதங்களில் 829 விபத்துக்களில், 123 பேர் பலியாகி உள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் புள்ளி விவரம் சராசரியாக ஒரு மாதத்துக்கு 120 என உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்த மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3,976 ஆகும். சராசரியாக 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களை குறைக்க  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும். சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

கண் துடைப்பாகி போன சாலை பாதுகாப்பு வார விழா

தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடக்கிறது. பெயரளவுக்கு பேரணி, துண்டு பிரசுரம் வினியோகம் என அதிகாரிகள் இதை முடித்துக்கொள்கிறார்கள். பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் விபத்தினால் ஏற்படும் இழப்புகள், விளைவுகள் குறித்து முறையாக விளக்கப்பட வில்லை என்பதும் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அந்தந்த பள்ளிகளில், கல்லூரிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கை ஆகும்.

Related Stories: