நித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு!

புதுடெல்லி: நித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய குழந்தைகளை துன்புறுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, புகார்களின் அடிப்படையில் அகமதாபாத் போலீசாரால் அவர் தேடப்பட்டு வருகிறார்.

குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமும் சீல் வைத்து மூடப்பட்டது. ஆனால் சர்ச்சை, சலசலப்பு என எதுக்கும் அஞ்சாமல் இணையதளம் வாயிலாக சத்சங்கத்தில் தோன்றி தனது சீடர்களிடம் நித்தியானந்தா பேசி வந்தார். இதற்கிடையே, ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவின. அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அதற்கான தனி பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் என சிலவும் வெளியாகின.

ஆனால், இந்த தகவல்களை மறுத்ததோடு, தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்ததையடுத்து, அவர் அப்போதே ஹெய்டி தீவிற்கு சென்றிருக்கலாம் எனவும் ஈக்வடார் நாட்டு தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குஜராத் ஆசிரமத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, நித்யானந்தா இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள மத்திய அரசு இன்டர்போல் உதவியை நாடியது. அதன்படி, நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவலைப் பெற வழிவகை செய்யும் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது இன்டர்போல். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டால் தகவல் அளிக்கவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Interpol Blue Corner ,Nithyananda , Nithyananda, Interpol, Blue Corner Notice, Gujarat Police
× RELATED குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்