ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜாவின் வெற்றி செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏவாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக தரப்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில், அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2016ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சரோஜாவும், திமுக சார்பில் அப்போதைய முன்னாள் சபாநாயகர் வி.பி துரைசாமியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சரோஜா, வி.பி துரைசாமியை விட 9 ஆயிரத்து 631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் அவர் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வி.பி துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பாக பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் செய்ததன் மூலமாக தான் சரோஜா வெற்றி பெற்றிருக்கிறார்.

எனவே அவரது வெற்றி செல்லாது எனவும், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் வைத்திருந்தார். இந்த வழக்கில் சரோஜா தனக்கு எதிரான வி.பி துரைசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார்.  அந்த மனு கடந்த 2017ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கின் விசாரணை முழுமையாக நடைபெற்றது. இருதரப்பு வாதம் மற்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் ஆகியவற்றை கேட்ட நீதிபதி தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று நீதிபதி பாரதிதாசன் வழங்கியுள்ள தீர்ப்பில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என்றும், மனுதாரர் வி.பி துரைசாமி கூறிய குற்றச்சாட்டுகள் முழுமையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவருடைய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் மூலமாக அமைச்சர் சரோஜா அதிமுக தொகுதியில் வெற்றிபெற்றது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: