×

பாம்பு மனிதரின் பரபரப்பு அனுபவங்கள்!

பாம்புகள் என்றாலே நம்மை அறியாமலே அருவெறுப்பும் பயமும் வந்துவிடும். பாம்பை கண்டதும் அடித்துக் கொல்லவோ ஒட்டம் பிடித்து செல்லவோ தான் செய்யுவோம். காடுகளின் பல்லுயிர் சமன்பாட்டுக்குப் பாம்புகள் மிக அவசியமான உயிரினம். மக்களிடையே பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வு ஓரளவுக்கு உருவாகியுள்ளதால், வீடுகளில் பாம்புகள் தென்பட்டால் இப்போதெல்லாம், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கிறார்கள். தொழில்முறை பாம்பாட்டிகளைத் தாண்டி, பாம்புகள் மீது அக்கறை கொண்ட ஏராளமான தன்னார்வ பாம்பு பிடிப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

பாம்புகளைப் பிடிப்பதைத் தொழிலாகப் பார்க்காமல் கலையாகவும் மக்கள் பணியாகவும் செய்துவருகிறார் தேனியை சேர்ந்த பாம்பு கண்ணன். தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி பகுதிகளில் பாம்பு கண்ணன் என்றால் அத்தனை பிரபலம். வீடு, பள்ளிக்கூடம், அரசு அலுவலகம் என எங்கே பாம்பு நுழைந்திருந்தாலும். அதைப் பிடித்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மைய வனப்பகுதியில் விடுவது இவரின் அறப்பணி. அவரது திகில் அனுபவங்களைப் பார்ப்போமா?

முப்பதாயிரம் பாம்பு! பாம்பைப் பிடிக்கும்போது சற்றே கவனம் தப்பினால் மரணம்தான். பாம்பு பிடிக்க கண்ணன் கற்றுக்கொண்டது விளையாட்டு போலவே நடந்தது.

“என்னோட பதினஞ்சு வயசுலே இருந்து பிடிக்குறேன்.  பள்ளியிலிருந்து வீட்டுக்கு வர்றப்போ, குளத்துக்கரையில் தண்ணிப் பாம்புகளை பிடிச்சி விளையாடுவது வழக்கம். அப்படிப் பழக ஆரம்பிச்சு இப்போ மக்கள் பணியாக மாறி இருக்கு.  20 வருடமாக செய்யுறேன். இதுவரைக்கும் 30 ஆயிரம் பாம்புகளை பிடிச்சி வனப்பகுதியில் விட்டு இருக்கேன்.”

ஏன் பாம்பு பிடிக்கிறார்?

“தேனி பக்கம் பூதிபுரம்னு ஒரு கிராமம். பாம்பு பிடிக்க வாங்கன்னு சொன்னதுமே, கிளம்பிப் போனேன். அதுக்குள்ளே ஒரு பையன் அடிச்சி கொன்னுடலாம்னு முயற்சி செஞ்சிருக்கான். அவனுக்கும், பாம்புக்குமான போராட்டத்துலே பாம்பு அவனை கடிச்சிடிச்சி. நுரை தள்ளி உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தவனை பைக்குலே தூக்கி உட்காரவெச்சிட்டு ஆஸ்பிடலுக்கு போறேன். வழியிலேயே என் தோள் மேலேயே உயிரை விட்டான். நாம சரியான நேரத்துக்கு வந்திருந்தா இந்தப் பையனை காப்பாத்தி இருக்கலாமேன்னு மனசு கிடந்து அடிச்சது. அப்படியே அவனைக் கட்டிப் பிடிச்சி கதறினேன். இப்போ வரைக்கும் அவன் உயிர் போனதுக்கு நானும் ஒரு காரணமோன்னு ஒரு குற்றவுணர்வு என்னை கொன்னுக்கிட்டு இருக்கு.
முத்துதேவன் பட்டியிலே இருந்து ஒருமுறை அழைப்பு.

வேகமா போயிட்டேன். அதுக்குள்ளே ஊரு மக்களும் சல்லடை போட்டு தேடிக்கிட்டு இருந்தாங்க. நானும் ஒரு நாலு மணி நேரம் தேடினேன். அப்போ பக்கத்துலே ஒரு கூரைக்கொட்டாயிலே கட்டியிருந்த தொட்டிலில் கைக்குழந்தை தூங்கிட்டு இருந்தது. தொட்டிலில் இருந்து ரத்தம் சொட்டுது. ஓடிப்போய் பார்த்தா நாகப்பாம்பு உள்ளே குழந்தையை சுத்திக்கிட்டு இருந்துச்சி. கடிச்சிடிச்சி. குழந்தை ஸ்பாட் அவுட். அந்த நிகழ்வுக்கு அப்புறம் எனக்கு ரெண்டு வாரம் சோறு, தண்ணியே இல்லை.

இந்த மாதிரி சம்பவங்களாலேதான் நான் தொடர்ந்து பாம்பு பிடிக்கிறேன். என் சுத்துவட்டார மக்களோட உயிரை பாம்புகளிடமிருந்து பாதுகாக்குறது என்னோட கடமைன்னு நெனைக்கிறேன். அதே நேரம் பாம்புகளையும் மக்களிடமிருந்து காப்பாத்தணும். யாரு பாம்பு புடிக்கணும்னு தகவல் கொடுத்தாலும் வேலையை எல்லாம் அப்படியே போட்டுட்டு உடனே ஓடிடறேன்.”

கருநாகம் கடிச்சிடிச்சி!

“தேனி பக்கம் வீரபாண்டிங்கிற ஊர்ல  ஏழு அடுக்கு  வைக்கோல் போர் ஒன்றில் பாம்பு இருக்கு, நீங்க வந்தே ஆகணும்னு சொன்னாங்க.  ஏணி போட்டு மேல ஏறி போய் தேடுனேன். அப்போ உள்ளே பாம்பு இருந்ததை பாத்துட்டு, வாலைப் பிடிச்சிகிட்டு கம்பு எடுத்துட்டு வாங்கனு கீழே தகவல் சொல்றேன். அதுக்குள்ளே பாம்பு என் வயித்துலே ஒரு போடு போட்டுடிச்சி. அப்போ அது எனக்குத் தெரியலை. ஏதோ வைக்கோல் குச்சி குத்திடிச்சின்னு நெனைச்சி வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்.

அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும்போது குரல் மாறி, பார்வை மங்க ஆரம்பிச்சிடிச்சி. நான் பிடிச்சது  கருநாகம். அது  கடிச்சா குரல் வளம் மாறிடும். உடனே மருத்துவமனைக்கு கொண்டுப் போய் காப்பாத்துனாங்க. அன்னையிலே இருந்து எல்லாரும் இந்த பாம்பு பிடிக்குறதை இனிமே செய்யாதப்பான்னு அறிவுரை சொல்லிட்டு இருக்காங்க. இதுவரை 33 முறை பாம்பு கடிச்சி உயிருக்குப் போராடி பொழச்சி இருக்கேன். இத்தனைக்கும் பாம்புக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சாதாரண விவசாயக் குடும்பம் எங்களோடது.’’

பிடித்த பாம்புகளை என்ன செய்கிறார்?

தேனி மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருப்பதால் எப்போதும் பாம்புகள் ஊருக்குள் படையெடுத்த வண்ணமாகவே இருக்கும். திண்டுக்கல்லிலும் பாம்புகள் அதிகம்தான் என்றாலும், விஷப்பாம்புகள் தேனி சுற்றுவட்டாரத்தில்தான் அதிகம். தான் பிடிக்கும் பாம்புகளை வீரபாண்டியார் கோயில் வனப்பகுதியின் மையத்தில் எடுத்துச் சென்று பாதுகாப்பாக விட்டு விடுகிறார்.

புதுமாப்பிள்ளை பொண்ணை கதிகலங்க வைத்த கட்டுவிரியன்! “அல்லி நகரம் பக்கம் கல்யாண வீடு. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மாடி அறையில் மாப்பிள்ளையோட இருக்காங்க. பாம்பு இருக்குற மாதிரி சத்தம் வருது உடனே வாங்கன்னு சொன்னாங்க. அங்கேப் போய் ஒருநாள் முழுக்க தேடிப் பார்த்தேன். சத்தம் கொடுத்தேன். பாம்பை வெளியே கொண்டுவர என்னவெல்லாம் நுணுக்கமா பண்ண முடியுமோ, அதுவெல்லாம் செய்தேன். ம்ஹூம். பிரயோஜனமில்லை. ராத்திரி பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச நேரத்துலேயே உடனே வாங்கன்னு போன் வந்தது.

போய் அறைக்கதவைத் திறந்தா ரத்த வாடை. பாம்பு குட்டி போடுதுன்னு புரிஞ்சது. பொதுவா பாம்புகள் முட்டைதான் இடும். பச்சைப் பாம்பும், விரியன் வகையறாக்களும்தான் குட்டி போடும். ஜன்னல் ஓரமா இருக்குற ஸ்க்ரீன் துணியை நகர்த்துனா பத்து குட்டி வரிசையா பொறந்துருக்கு. பாதுகாப்பா அதை அகற்றி வனப்பகுதிக்கு போய் விடிஞ்சதும் நடுகாட்டுலே விட்டேன்.

அந்த பொண்ணு மாப்பிள்ளைக்கு ரொம்ப சந்தோஷம். என்னை அவங்க உடன்பிறப்பாவே ஏத்துக்கிட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் அவங்க குடும்ப விசேஷங்களில் கலந்துக்கறேன். தீபாவளி, பொங்கல்னா மறக்காம சட்டைத்துணி சீர் செய்யுறாங்க. இதுமாதிரி எனக்கு நிறைய உறவுகளை பாம்புகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கு.”

கண்ணனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தநாள்! “எனக்கு மூணு அண்ணன். நான்தான் கடைசிப் பையன். போன வருஷம் உடம்பு சரியில்லாமே அப்பா தவறிட்டாங்க. கடைசிப் பையன்தானே கொள்ளிப் போடணும்? மொட்டையெல்லாம் அடிச்சித் தயாராயிட்டேன். அப்பாவோட பூவுடலை தூக்க தயார் ஆகுறப்போ போன் வந்துச்சி.

தேனி அல்லிநகரத்தோட நகராட்சி பள்ளிக் கூடத்துலே பாம்பு நுழைஞ்சிடிச்சி. உடனே தீயணைப்புத் துறையினருக்கு போன் போட்டு என் நிலைமையை சொன்னேன். ஸ்பாட்டுக்கு போன அதிகாரிங்க, ‘எங்களாலே பிடிக்க முடியலை கணணன். நீங்க வந்தாகணும்’னு சொன்னாங்க. வீட்டு வாசல்லே அப்பா உடம்பு இருக்கு. உறவினர்கள் விடமாட்டாங்க.

வீட்டுமாடி வழியா போய் பைப்லைனை பிடிச்சி. பக்கத்து தெரு நண்பனோட பைக்லே போய் பள்ளி ஓட்டுலே மறைந்திருந்த கருநாகத்தைப் பிடிச்சி, தீயணைப்பு காவலர்கள்கிட்டே கொடுத்துட்டு வேகவேகமா வீட்டுக்கு வந்தேன். வீட்டு வாசல்லே பைக்கை நிறுத்துறேன். ஒரு தோல் செருப்பு  மூஞ்சி மேலே வந்து விழுது. கொஞ்ச நேரத்துலே மாமா, சித்தப்பா எல்லாரும் என்னை கண்டபடி அடிக்கத் துவங்கிட்டாங்க. மனுஷனாடா நீ. பெத்த அப்பன் செத்துக் கெடக்கான். பாம்பு பிடிக்கப் போயிட்டேன்னு சொல்லி  அடி பின்னிட்டாங்க. நிறைய சொந்தக்காரங்க அந்தச் சம்பவத்தால் இன்னிக்கு வரைக்கும் கூட என்னோட பேசுறதில்லை.

என் அம்மாதான் ரொம்ப வருத்தப்பட்டாங்க. என்னை ஏண்டா பெத்தோம்னு கூட நெனைச்சாங்க. அவங்க கிட்டே எடுத்துச் சொன்னேன். “அப்பா நல்லா வாழ்ந்து இயற்கையோட கலந்துட்டாரும்மா. ஆனா, ஸ்கூலிலே படிக்கிற ஒரே ஒரு குழந்தை பாம்பு கடிச்சி செத்திருந்தா என்னோட மனசு என்னையே கொன்னுடும்மா”ன்னு கதறுனேன். அம்மா கலங்கிட்டாங்க. அன்னிலேருந்து நான் எப்போ பாம்பு பிடிக்கப் போனாலும் சாமி கும்பிட்டு, எனக்கு திருநீறு வெச்சி விட்டுதான் அனுப்புறாங்க.”

பொண்ணு கிடைக்கலை சார்! கண்ணன் செல்போன் பெரும்பாலும் நள்ளிரவில் தான் சிணுங்கும். எதிர்முனையில் இருப்பவர்கள் ஒருவித பதற்றத்துடன் பேசுவார்கள். கண்ணைக் கசக்கிக்கொண்டு, பாம்பு பிடிக்கும் கம்பியை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார்.  மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடமை எனக்கூறும் கண்ணனை மனதளவில் காயப்படுத்திய சம்பவங்கள் நடக்காமல் இல்லை.

“என்னோட நெருங்கிய நண்பன் செய்த காரியம் நிலைகுலைய வைத்தது. திருமணத்துக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சேன். அவன் உடம்பு முழுக்க விஷம். அவனுக்கா பொண்ணு கொடுக்கறீங்கன்னு பல இடங்களில் சொல்லி வெச்சிருக்கான். மனசு உடைஞ்சு உட்கார்ந்துட்டேன். உடனே மருத்துவரைப் பார்த்து சொன்னேன். பாம்பு மனிதர்களைத் தீண்டி ரத்தத்தில் விஷம் கலந்தால் மட்டுமே உயிருக்கு ஆபத்து. மற்றபடி, பாம்பு விஷத்தை குடித்தால் கூட உயிருக்கு ஆபத்தில்லை. இதை நிரூபிப்பதற்காக டிஸ்கவரி சேனலில் பாம்பு விஷத்தையும் மக்கள் மத்தியில் குடித்துக் காட்டிய பாம்பு ஆர்வலர்கள் பற்றிய தகவல்களை எடுத்துச் சொன்னார்.

பாம்பு விஷம் என்பதையும் தாண்டி உயிர் காக்கும் பல மருந்துகளாக பயன்படுத்துகிறார்கள். பாம்பு விஷத்தை உடலில் யாரும் வெச்சிருக்க முடியாது” என்று சிரிக்கிறார். சரி, கண்ணனுக்கு கல்யாணம் ஆயிடிச்சா? “இன்னும் பொண்ணு தேடிக்கிட்டே இருக்கோம் சார்!” அரசு வேலை வேண்டாம் பாம்புகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் கண்ணன். பிடிபடும் பாம்புகளை வனத்துறையினரிடம் ஒப்படைப்பார்/ அல்லது அவரே வீரப்பாண்டி வனப்பகுதியில்  விட்டு விடுவார்.  

பாம்பு பிடிக்கும் இடங்களில்  பெரும்பாலும் பணம் வாங்குவதில்லை. வழிச்செலவுக்கு அவர்கள் கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். கண்ணன் திறமையை மெச்சி, தேனி மாவட்ட ஆட்சியர் பல விருதுகளை பாராட்டி வழங்கியுள்ளார். கேரளாவில் பெருமழை வெள்ளம் வந்த பிறகு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் அங்குச் சென்று பல மாதங்கள் தங்கி இருந்து, வீடுகளில் புகுந்த பாம்புகளை அகற்றினார். வனத்துறையில் கண்ணனுக்கு இரண்டு முறை பணி நியமனம் வழங்கப்பட்டது.

மக்களுக்குச் சேவை செய்வதற்காக கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார். அரசுப்பணிக்கு வந்தால், மக்கள் அழைக்கும் போது செல்ல முடியாது என கூறி ஏற்க மறுத்து விட்டார்.’ “பாம்புகள் மனிதர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அப்பாவி உயிரினங்கள். என்னைப் பொறுத்தவரை அவை எப்போதும் நண்பன்” என கூறும் கண்ணன், இதுவரை ஒரு பாம்பைக்கூட அடித்துக்கொன்றது இல்லை.

ஜெயில்லே போடுவாங்க, ஜாக்கிரதை! பாம்பைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட கதைகள் தொண்ணூறு சதவிகிதம் பொய். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்பு கதைகளை நம்பவே நம்பாதீர்கள். மனித இனம் தோன்றுவதற்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பாம்புகள் தோன்றிவிட்டன. எனவே நம்மைவிட அவற்றுக்கு பூமியில் வாழும் உரிமை கூடுதல். தமிழ் நாட்டில் 325 வகை பாம்புகள் உள்ளன அதில்  கொடிய விஷம் கொண்டவை நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், ராஜநாகம், கரு நாகம், ரத்த வீரியன், செவுட்டு வீரியன், என 25 வகை பாம்புகளுக்கு தான் விஷமுண்டு. நாம் காணும் பாம்புகளில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பாம்புகள் விஷமற்றவையே.  மழைக்காடுகளில் உள்ள ஊர்களில் தான் அதிகம் இருக்கும்  கண்ணாடி விரியன், செவுட்டு வீரியான், கட்டு வீரியன் தவிர்த்து மற்ற வகை பாம்புகள், மனித நடமாட்டத்தை கண்டால் அஞ்சி ஓடிவிடும்.

 நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை காட்டிலும், பாம்புகளுக்கு நம் மீது பயம் அதிகம். விரியன் வகை பாம்புகள் நம்மை கண்டால் ஓடி ஒளியாமல் அதே இடத்தில் சுருண்டுக் கொள்ளும். அதற்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே தாக்க முயலும். பெரும்பாலும் பாம்பு கடித்து விஷத்தினால் இறப்பவர்களைவிட  பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தினால் இறப்பவர்களே அதிகம்.

இந்திய வனப்பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, அரிய உயிரினமாகிவிட்ட ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் ஆகும். இவற்றை கொல்வது, வீட்டில் வளர்ப்பது, துன்புறுத்துவது, வெளி நாடுகளுக்கு கடத்துவது போன்ற செயல்கள் குற்றம் ஆகும். ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படக்கூடிய கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இதற்காக மற்ற பாம்புகளை அடித்துக் கொல்லலாமா என்றால் அதுவும் கூடாது. மத்திய, மாநில அரசு வனச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

படங்கள்: ராதா கிருஷ்ணன்
தொகுப்பு: திலீபன் புகழ்


Tags : Snake Man , Snake, forest, creature, forest department
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...