ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த தேர்தலில் காலியாக உள்ள 335 இடங்களுக்கு வரும் 30ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11ம் தேதி  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நிறுத்தப்பட்ட 335 பதவிடங்களுக்கு மறைமுக தேர்தல் ஜனவரி 30ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும், பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி மறைமுக தேர்தல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: