ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஜன.28-ல் கண்டன ஆர்ப்பாட்டம்... ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவிரிப் படுகையை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து  மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.  பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும்  விவசாயிகள்,  பொதுமக்கள் சாகும்வரை போராட்டம், வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு  அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதேநேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்  கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை. ஆனால் இதற்கு மாறாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஹைட்ரோகார்பன்  ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என திமுக அறிவித்துள்ளது. சுற்றுசூழல் அனுமதி, கருத்துக்கேட்பு கூட்டம் தேவையில்லை என்ற முடிவை எதிர்த்து பிரதமருக்கு ஒருபுறம் முதல்வர் கடிதம் எடுத்தியுள்ளார். சுற்றுசூழல் அனுமதியும், கருத்துக்கேட்பு கூட்டம் தேவையில்லை என்று முதல்வருக்கு முரணாக அமைச்சர் கருப்பணன் கடிதம் எழுதியுள்ளார். விவசாயிகளை ஏமாற்றும் ஒரே நோக்கத்துடன் அதிமுக அரசு கபட நாடகம் நடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாடினார். தமிழக உரிமைகளுக்கும் விவசாய நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்ற ஆணைய திரும்ப பெற திமுக வலியுறுத்தியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 28-ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் மாபெரும் துரோகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: