பாலாற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை: ரூ. 82 கோடியில் திட்டமிட்டு ரூ.32 கோடியில் கட்டி முடிப்பு

சென்னை: சென்னை அருகே பாலாற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 82 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்ட அணையை 32 கோடியில் கட்டி முடித்து, 50 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளனர். இதே தொழில்நுட்பம் மாநிலம் முழுவதும் பின்பற்றப்படவுள்ளது. பருவமழை காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் கடலில் வீணாய் போய் கலக்கிறது என்பது புகார். இதற்குள் பாலாறும் தப்பவில்லை. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் நந்திமலையில் உற்பத்தியாகி தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் பயணிக்கும் பாலாறு சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் அருகே வாயலூர் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. அங்கு தடுப்பணை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

அது தற்போது நினைவாகியுள்ளது. பாலாற்றின் வால் பகுதியான வாயலூரில் 82 கோடி ரூபாய் செலவில் ஓராண்டில் தடுப்பணையை கட்டி முடிக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால் 6 மாதத்தில் வெறும் 32 கோடி ரூபாய் செலவிலேயே அணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. திட்ட செலவில் 50 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. தடுப்பணை கட்டுவதில் பின்பற்றப்பட்ட புதிய தொழில்நுட்ப முறையே இதற்கு காரணம் என சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே தடுப்பணை தயாராகி விட்டதால் இப்போது 1 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளது.

கடல்நீர் உட்புகாமலும் தடுக்கப்பட்டிருக்கிறது. ஆற்று படுக்கையில் 1 மீட்டர் ஆழத்திற்கு, 1 மீட்டர் அகலத்திற்கு, 1200 மீட்டர் நீளத்துக்கு வலுவான கான்கிரிட் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, கப்பல் கட்டும் இடங்களில் பின்பற்றப்படும் தொழில்நுட்பம் இதில் கையாளப்பட்டு இருப்பதால் பெருவெள்ளம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. இதையடுத்து, இனி தமிழகத்தில் கட்டப்படும் தடுப்பணைகள் அனைத்திலும் இதே தொழில்நுட்பம் பின்பற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: