வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் வேலம்மாள் பள்ளி விடுதி மாணவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் வேறு இடத்துக்கு மாற்றம்!

தஞ்சை: வருமானவரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் வேலம்மாள் பள்ளி விடுதி மாணவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் இதுவரை சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வேலம்மாள் பள்ளி விடுதி மாணவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாமல் பள்ளி வகுப்பறையிலேயே விடுதி நடத்தி வந்ததாக தெரிகிறது.

எனவே, வேலம்மாள் கல்வி குழுமங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், விடுதியில் தங்கவைக்கப்பட்ட 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பெற்றோருக்கு தெரியாமல் அவசர அவசரமாக பள்ளி வாகனத்தின் மூலம் வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வருமானவரித்துறையின் சோதனையின்போது, விடுதி விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியவந்துவிடும் என்ற அச்சத்தால் மாணவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: