×

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சோத்துப்பாறை அணை: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

தேனி: சோத்துப்பாறை அணை பகுதியில் போலீஸ் பாதுகாப்பில்லாமல் உள்ளதால் அணைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தேனி மாவட்டம் சுற்றுலா பகுதிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தில் மேகமலை வனப்பகுதி, வைகை அணை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. இதுதவிர தேனி மாவட்டத்தை ஒட்டி தேக்கடி பெரியாறு அணை, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்டவையும் உள்ளதால் தேனி மாவட்டம் சுற்றுலாவுக்கு பிரசித்திபெற்ற மாவட்டமாக உள்ளது. இதில் மூணாறு, தேக்கடிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் பெரும்பாலும், வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவியை பார்த்துச் செல்கின்றனர். இன்னும் பலர் கும்பக்கரை அருவி வரும்போது சோத்துப்பாறை அணைப்பகுதிக்கும் ஒரு விசிட் அடித்தே செல்கின்றனர். தமிழகத்தின் 2வது உயரமான அணை என்ற பெயர் பெற்றுள்ள இந்த அணையை அருகில் இருந்து பார்த்து மகிழ்வதற்கென சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

இத்தகைய சோத்துப்பாறை அணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது, சுற்றுலா பயணிகளுக்கான எவ்வித வசதியும் அணை பகுதியில் இல்லை. சமீபகாலமாக அணை பகுதியில் எந்த போலீசும் பாதுகாப்புக்கு இல்லை. விடுமுறை காலங்களில் சோத்துப்பாறை அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும்போது ரோமியோக்கள் கூட்டம் அதிகரித்து விடுகிறது. இதனால் பெண்களை அழைத்துக்கொண்டு சோத்துப்பாறை வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அணையை பார்க்க வரும் வழியில் உள்ள இரும்பு பாலத்தில் சில ரோமியோக்கள் ஆபாச உடையில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு குளிப்பதும், பாலத்தில் இருந்து பெண் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக டைவ் அடிப்பதுமாக இருந்து வருகின்றனர். மேலும், சில வாலிபர்கள் இந்த பாலப்பகுதியை கடந்து செல்லும் போது, பெண்களை கேலிசெய்வதும், கிண்டல் அடிப்பதுமாக உள்ளனர்.

இதனை தட்டிக்கேட்க வேண்டிய போலீசார் ஒருவர் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாத நிலையே நீடித்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு குடும்பத்துடன் வரும் பயணிகள் அருவறுக்கத்தக்க வகையில் வாலிபர்களின் சில்மிஷத்தால் வேதனையுடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சோத்துபாறை அணை பகுதியில் விடுமுறை தினங்களிலாவது போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Unsafe Sothapatra Dam ,Will District Administration ,district administration ,Sothuparai Dam ,tourist , For tourists, insecure, Sothapatra Dam
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்