15.48 நிமிடத்தில் 2,020 முறை ‘ஸ்கிப்பிங்’ செய்து சாதனை: விருதுநகர் மாணவி அசத்தல்

விருதுநகர்: விருதுநகரில் 15.48 நிமிடங்களில் 2,020 முறை ஸ்கிப்பிங் செய்து 7ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.விருதுநகரில் உள்ள பிஎஸ்சி ஆங்கிலப்பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவர் சகித்யா தரிணி (13). இவர், 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில், தனது பள்ளி வளாகத்தில் 50 வகையான ஸ்கிப்பிங்கில் 2,020 முறை தாண்டி புதிய சாதனை செய்தார். இதற்காக பயிற்சி செய்து வந்தார். இவர் 50 வகையான ஸ்கிப்பிங்கை 2,020 முறை 15.48 நிமிடங்களில் செய்து சாதனை நிகழ்த்தினார்.

இச்சாதனையை ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்’ நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன், ‘பியூச்சர் காலம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனர் டாக்டர் செல்வம் என்ற உமா ஆகியோர் முன்னிலையில் செய்தார். இதை அங்கீகரித்து இரண்டு நிறுவனங்களும் சான்றிதழ்களை வழங்கின. இதற்கு முன் ஜப்பானில் 30 வினாடிகளில் 80 முறை ஒரே வகையான ஸ்கிப்பிங் செய்தது சாதனையாக இருந்தது.

இதுகுறித்து மாணவி சகித்யா தரிணி கூறுகையில், ‘‘அழியும் நிலையில் உள்ள ஸ்கிப்பிங் கலையின் பக்கம் மக்கள் கவனத்தை திருப்பவே, 50 வகையான ஸ்கிப்பிங் செய்வதற்கு கடந்த 3 மாதமாக பயிற்சி மேற்கொண்டேன். ஸ்கிப்பிங் செய்தால் உள்ளங்கால் முதல் தலை உச்சி வரை புத்துணர்வு கிடைக்கும், மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்’’ என்றார். நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் நவராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

50 வகை ஸ்கிப்பிங் என்னென்ன?

சாதாரண முறை, முன்பக்கம், பின்பக்கமாக செல்லுதல், ஒற்றை காலில் முன்பக்கம், பின்பக்கம், ஜாக்கிங், வாத்து ஸ்கிப்பிங், 1, 1 1/2, 2, 2 1/2, 3, 3 1/2, 4 அடி உயர ஸ்டூல்களில் ஸ்கிப்பிங் செய்தல், 20 கயிறுகளில் ஸ்கிப்பிங் செய்தல் என 50 வகையான ஸ்கிப்பிங் செய்து அசத்தினார்.

Related Stories: