தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணும் தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.30,416க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்க விலை சற்று உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 ஆக உள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ 3,802க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து 49.80க்கு விற்பனை செய்யபடுகின்றது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,800 ஆக உள்ளது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச்சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: