சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி...:6 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற மருத்துவமனையில் அனுமதித்த சிஆர்பிஎப் வீரர்கள்

சத்தீஷ்கர்: பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பதேதா என்ற கிராமப்பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் 85-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படேடா என்ற கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக செய்தி கிடைத்துள்ளது.

உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களுடன் அங்கு விரைந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி எதுவும் இல்லை என்று  பாதுகாப்பது படையினருக்கு தெரியவந்தது.  

அதனால் அந்த கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் அமர வைத்து, அந்த கட்டிலில் கயிறு கட்டி தொட்டில் போன்று சுமந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மனிதநேயத்துடன் செயல்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related Stories: