உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பான வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை

சென்னை: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொலை செய்த தவுபீக், ஷமீம் மீது உபா சட்டம் போடப்பட்டதையடுத்து தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கன்னியாகுமரி களியக்காளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. விசல்னை கடந்த 8-ந் தேதி அப்துல் சமீம், தவ்ஃபிக் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பின்னர், இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவர் மீதும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், இவ்வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த 2 தீவிரவாதிகளும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக பெங்களூரு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் தவுபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை நீதிமன்றத்தில் இருந்து நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அரிவாள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் முக்கியமான தடயங்களாக இவ்விரு பொருட்களும் இருப்பதால், அது குறித்து தனிப்படை போலீசார் இருவரிடம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக 10 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்த வழக்கு என்ஐஏ.-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வில்சன் கொலை சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் என்ஐஏ.-வுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொலை குற்றவாளிகள் மீது உபா சட்டம் போடப்பட்டதை அடுத்து தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

Related Stories:

>