பொருளாதார சரிவு குறித்து ஐஎம்எப் கணிப்பு: அமைச்சர்களின் தாக்குதலுக்கு தயாராகுங்கள்: ப.சிதம்பரம் கிண்டல் பதிவு

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட கணிப்பால் ஐஎம்எப் அமைப்பையும், அதன் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்தையும் மத்திய அமைச்சர்கள் தாக்கி பேச தயாராவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து உண்மை நிலவரத்தை ஐஎம்எப் தெரிவித்துள்ளது. அதன்படி 2019-20ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். அதாவது 4.8 சதவீதம் அளவில்தான் இருக்கும் என தெரிவித்துள்ளது.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்குப் பின்புதான் 4.8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி கூட வந்துள்ளது. இந்த சதவீதத்துக்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி சரிந்தாலும் நான் வியப்படைய மாட்டேன். ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், முதன் முதலாக பணமதிப்பு நீக்கம் மோசமான நடவடிக்கை என்று விமர்சித்தவர். இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பையும் அவர் குறைத்துள்ளதால், கீதா கோபிநாத்தையும், ஐஎம்எப் அமைப்பையும் தாக்கிப்பேச மத்திய அமைச்சர்கள் தயாராவார்கள், அதற்கு நாம் தயாராக வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Related Stories: