மத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிதாக 2,000 பணியிடங்களுக்கு அனுமதி: உள்துறை அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிதாக 2,000 வீரர்கள் பணியிடங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 60 விமான நிலையங்கள், அணுசக்தி மையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முக்கியமான 12க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் வளாகங்களிலும் இப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் கடுமையான பயிற்சி பெற்றவர்கள் என்பதால், எத்தகைய சூழ்நிலையிலும், பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையத்தின் பாதுகாப்பு பணி, இம்மாத இறுதியில் மாநில போலீசாரிடம் இருந்து மாற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிதாக 2000 வீரர்கள் பணியிடங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.  இதன்படி, அடுத்த 2 ஆண்டில், தலா 1000 வீரர்களை கொண்ட இரண்டு புதிய பட்டாலியன்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்க முடியும். இப்படையில் தற்போது மொத்தம் 1.80 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

Related Stories: