சார்ஸ் போன்ற தொற்று நோய் சீனாவில் வேகமாக பரவுகிறது கொரோனா ஆட்கொல்லி வைரஸ் : இதுவரை 300 பேர் பாதிப்பு; 4 பேர் பலி

பீஜிங்: சார்ஸ் போன்ற கொரோனா ஆட்கொல்லி வைரஸ் சீனாவில் அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவில் கொரோனா வகையைச் சேர்ந்த ஆட்கொல்லி வைரஸ் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ் தொற்றாகும். கடந்த 2000ம் ஆண்டில் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் சார்ஸ் வைரஸ் பரவியது. இதற்கு 774 பேர் பலியாயினர். சார்சும் கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தது. இதுவும் சீனாவில் இருந்தே பரவத் தொடங்கியது.

அதே போல, தற்போது புதிய ஆட்கொல்லி வைரசான கொரோனா சீனாவில் பரவி வருவதால் பெரும் பீதி நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் வுகானில் முதல் முதலாக இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சுமார் 300 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4 பேர் பலியாகி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரமற்ற நோய் தொற்றுள்ள இறைச்சி, முட்டை, கடல் உணவுகள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதாகவும், இறைச்சி, முட்டைகளை நன்கு சமைக்கவும் உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளை எச்சரித்துள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஆகியவை ஆகும். சீனாவில் இருந்து வருபவர்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தீவிர உடல் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன. இதற்கிடையே, நோய் தொற்றை தடுக்க உரிய ஏற்பாடு செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச அவசர நிலை அறிவிக்க ஆலோசனை

சமீபத்தில் சீனாவில் புத்தாண்டையொட்டி மக்கள் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுலா சென்றனர். இதன் மூலம், இந்த புதிய வைரஸ் பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருகிறது. இதுவரை வுகான், பீஜிங், குவாங்டோங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீன பயணிகள் மூலமாக தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பானிலும் தலா ஒருவருக்கு புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் எச்சரிக்கை அடைந்துள்ளன. இதற்கிடையே, சர்வதேச பொது சுகாதார அவசரநிலை அறிவிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

Related Stories: