×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஏஞ்சலிக் கெர்பர் : ஷரபோவா வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். முதல் சுற்றில் இத்தாலியின் எலிசபெத்தா கோக்சியரெட்டோவுடன் நேற்று மோதிய கெர்பர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் 2வது ரேங்க் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்.) 6-1, 7-5 என்ற நேர் செட்களில் பிரான்சின் கிறிஸ்டினா மிளாடெனோவிச்சை வீழ்த்தினார்.
‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி பெற்று களமிறங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவா 3-6, 4-6 என்ற நேர் செட்களில் டோபா வேகிச்சிடம் (குரோஷியா) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), சிமோனா ஹாலெப் (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கார்பினி முகுருசா (ஸ்பெயின்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் 6-2, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் பொலிவியாவின் ஹியூகோ டெல்லியனை எளிதாக வீழ்த்தினார். இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் தனது முதல் சுற்றில் 4-6, 2-6, 5-7 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீரர் டட்சுமா இடோவிடம் தோற்று வெளியேறினார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ்), நிக் கிர்ஜியோஸ் (ஆஸி.), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Sharapova ,round ,Angelica Gerber , Australian Open Tennis, 2nd round Angelica Gerber, Sharapova out
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் நடால்