×

வெளிநாட்டு கும்பலிடம் இருந்து போதை பொருள் வாங்க ஆர்டர் கொடுத்த சென்னை கல்லூரி மாணவன் கைது

* வாட்ஸ்அப்பில் போதை பொருள் விற்பனை கடை நடத்தியது அம்பலம்
* பொறி வைத்து பிடித்த போலீஸ்

சென்னை: வெளிநாட்டு கும்பலிடம் இருந்து போதை பவுடர், ஊசி மற்றும் மாத்திரைகளை ஆர்டர் கொடுத்து வரவழைத்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த சென்னை கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டான். சென்னை வடபழனியில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவர்கள் அதிகளவில் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த போதை பொருள் பயன்படுத்துவதாக வடபழனி போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன்படி போலீசார் ரகசியமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி அருகே சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 மாணவர்கள் சக மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே கல்லூரியில் படித்து வரும் விஷால்குமார், விஜய், ஹரிஷ் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் சக மாணவன் முகப்பேரை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மூலம் கடந்த ஓராண்டாக வெளிநாடுகளில் இருந்து ‘ஓஜி வீட்’ என்ற போதை பொருளை மொத்தமாக மும்பை வழியாக வரவழைத்து சிறுக சிறுக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், இதற்காக ரகசியமாக கல்லூரி மாணவர்களுக்குள் வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கி போதை பொருள் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் 3 கல்லூரி மாணவர்களையும் கடந்த 4ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட வெளிநாட்டு போதை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவனான சரவணகுமார் தலைமறைவாக இருந்தார். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று அதிகாலை அவரை போலீசார் கைது செய்தனர். சரவணகுமார் சர்வதேச போதை பொருள் முகவர்களுடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் வெளிநாட்டு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து வெளிநாட்டு போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai ,college student , Chennai college student, arrested, ordering narcotics
× RELATED கூடுவாஞ்சேரி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவன் கைது