×

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு தடை : பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை:  தண்டையார்பேட்டையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்ட தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன். மீனவர் நலச்சங்க தலைவராக உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனம் ஒன்று தண்டையார்பேட்டையில் 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி இன்றி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் கடற்கரையில் இருந்து 80 மீட்டர் தூரத்தில் கட்டப்படுவதால் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டப்படும் இந்த கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் மனுதாரர் குறிப்பிடும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கு நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் மகேஸ்வரன் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, மனுவை விசாரித்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. கட்டுமான நிறுவனத்தின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதி மீறலுக்காக எவ்வளவு இழப்பீடு வசூலிக்கலாம்? என்பது குறித்து அதிகாரிகள் குழு மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : apartments ,Green Tribunal , Prohibition of built apartments,environmental clearance,Green Tribunal Directive
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்