வில்லிவாக்கத்தில் பரபரப்பு 10 லட்சம் கேட்டு ரயில்வே ஊழியரின் மகன் கடத்தல்

பெரம்பூர்: வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (39). பெரம்பூர் லோகோவில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சஞ்சய் (14). சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சஞ்சய் வில்லிவாக்கம் அனுசியா நகர் பகுதியில் டியூஷன் சென்டருக்கு சென்றார்.  வழக்கமாக 8.30 மணிக்கு டியூசன் முடிந்து வீட்டுக்கு வரும் சஞ்சய் வெகு நேரமாகியும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நள்ளிரவு 1 மணி வரை தேடி பார்த்தனர். சிறுவன் கிடைக்காததால் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கடத்தப்பட்ட சிறுவன் சஞ்சய் அம்பத்தூர் சூரப்பட்டு ரோடு வழியாக  ஓடி வந்தான். அதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் பிரவின் மற்றும் கார்த்திக் சிறுவனை மடக்கி பிடித்து விசாரித்தனர். உடனடியாக அவனை அந்த வழியாக ரோந்து பணியில் வந்த அம்பத்தூர் உதவி ஆய்வாளர் குமரனிடம் ஒப்படைத்தனர்.

Advertising
Advertising

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஒரு நபர் காரில் கடத்தி சென்றதாகவும், ஒரு வீட்டில் அடைத்து வைத்ததாகவும் தற்போது அங்கிருந்து தப்பி உள்ளதாகவும் சிறுவன் தெரிவித்தான். அதன்பேரில் சிறுவன் காணாமல் போனதாக ஒரு புகார் ராஜமங்கலம் காவல் நிலைத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளதை அறிந்த உதவி ஆய்வாளர் குமரன் சிறுவனை மீட்டு ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட ராஜமங்கலம் போலீசார் சிறுவனை அழைத்துச் கடத்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். சிறுவன் அம்பத்தூர் சண்முகபுரம் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டை காண்பித்தான். அங்கு உள்ளே சென்று விசாரித்த போலீசார் லோகேஸ்வரன் (28). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும், அதே வீட்டில் தங்கியுள்ளதும் தெரிய வந்தது. லோகேஸ்வரன் நேற்று டியூசன் முடிந்து வந்த சிறுவன் சஞ்சயை தனது காரில் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றதும் சிறுவனின் தந்தையிடம் 10 லட்சம் கேட்டு மிரட்ட இருந்ததும் தெரியவந்தது.  இதனையடுத்து லோகேஸ்வரனை கைது செய்த ராஜமங்கலம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.         

தானாக தப்பிய சிறுவன்

சிறுவனை கடத்திய லோகேஸ்வரன் கடத்திய விவரத்தை கூறாமல் வேறு காரணங்களை கூறி காரிலேயே பீச்சுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து “உன்னை இரவு வீட்டில் விட்டு விடுகிறேன். அதுவரை கூச்சல் போட வேண்டாம். நான் உனது நண்பன்” என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இரவு நேராக வீட்டிற்கு சென்ற லோகேஸ்வரன் மதுபோதையில் படுத்து உறங்கிவிட்டார். பின்புதான் சிறுவனுக்கு தான் கடத்தப்பட்டதாக தெரியவந்து காலை அங்கிருந்து தப்பியுள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: