பல்லாவரம்-திருநீர்மலை பிரதான சாலையில் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தம்

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலை, நாகல்கேணி அருகே நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படும்   வாகனங்களால் அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் தினமும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையானது, சென்னை புறநகர் பகுதியில் வாகன போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

நாகல்கேணி பகுதியில் உள்ள ஏராளமான தோல் தொழிற்சாலைகள், திருமுடிவாக்கம் மற்றும் திருபெரும்புதூர் ஆகிய சிப்காட் பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. இந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு, சாலைப் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.  இதன் மூலம் அரசுக்கும் அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருநீர்மலை செல்லும் பிரதான சாலையானது, ஏற்கனவே குறுகிய நிலையில் காணப்படுவதால், எந்நேரமும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளதாகவும், இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து நாகல்கேணி வரை திருநீர்மலை செல்லும் சாலையின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதசாரிகள் அதில் நடந்து, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விபத்து இல்லாமலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் எளிதில், பாதுகாப்பாக சென்று வர முடிந்தது. இந்நிலையில் சமீப காலமாக இந்த நடைமேடையை ஆக்கிரமித்து தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை அதிக அளவில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையை உபயோகப் படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சாலையில் இறங்கி நடக்கும் பாதசாரிகள், அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழ்நிலையும்  ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதசாரிகள் நடைபாதையை உபயோகப்படுத்தாமல் சாலையில்  இறங்கி நடப்பதால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனை கருத்தில்  கொண்டு, பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன் மூலம் வருங்காலங்களில், நடைபாதை ஆக்கிரமிப்பு தடுக்கப்படுவதுடன், பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல வழிவகுக்கும்’’ என்றனர்.

Related Stories: