அதிமுக வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த காட்டுமன்னார் கோவில் தொகுதி தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: கடந்த 2016ல் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியடைந்தார்.  இதையடுத்து முருகுமாறன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமாவளவன் சார்பில் ஆஜரான வக்கீல் தபால் வாக்குகளை செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, தபால் வாக்குகள் எண்ணிக்கையின்போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரி விஜயராகவன் வாக்கு எண்ணிக்கையின்போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் நேரில் ஆஜரானார். சீலிடப்பட்ட தபால் வாக்குகளை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் முன் அந்த வாக்குகள் கொட்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.  அப்போது, தேர்தல் அதிகாரி, இதில் ஒரு வாக்கு, வேறு தொகுதிக்கு பதிவான வாக்கு என்றும், மற்ற வாக்கு சீட்டுகள் செல்லாதவை என்பதால் நிராகரிக்கப்பட்டது என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.  இதைப்பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.  பெரியார் வாழ்க என்பார் ரஜினி: கோர்ட்டுக்கு வந்திருந்த திருமாவளவன் வெளியில் அளித்த பேட்டியில், சங் பரிவார் கருத்துக்களுக்கு ரஜினி அடிபணிந்து செல்கிறார். இதுதான் ரஜினியின் அரசியல் நிலைப்பாடாக இருந்தால் அந்த கனவு பலிக்காது. பெரியாரை விமர்சித்து கொச்சைப்படுத்துவது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்றார்.

Related Stories: