குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது: பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. சாபம்

ஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. கருப்பணனை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்குமாறு கட்சி தலைமையிடம் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டவரை வெற்றி பெறச் செய்வதற்கு அமைச்சர் கருப்பணன் முயற்சித்ததாகவும், பின்னர் இது முறியடிக்கப்பட்டதாகவும் தோப்பு வெங்கடாச்சலம் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நேற்று கூறியதாவது: பெருந்துறை தொகுதியில் செயல்படுத்தப்பட உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அமைச்சர் கருப்பணன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் ஒருபகுதியாகத்தான், உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராகவும், சுயேட்சைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டத்தையே ஒரு அமைச்சர் தடுக்க முயல்வது வேடிக்கையாக உள்ளது. மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள ஒட்டுமொத்த பதவிகளையும் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாங்கி கொடுத்துள்ளார். ஊர் முழுவதும் சாயக்கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் குத்து பாடல்களுக்கு அமைச்சர் ஆட்டம் போடுவது விநோதமாக உள்ளது.

கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒருமுறை கூட ஆலோசனை கூட்டம் நடத்தியது இல்லை. இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க. என்ற கட்சி முழுமையாக கரைந்துவிடுமே தவிர, கரைசேர வாய்ப்பு இல்லை. எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது.  இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

Related Stories: