×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 24ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 24ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று திமுக தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இதனை கண்டிக்கும் வகையில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பதற்காக வருகிற 24ம் தேதி திமுக தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் முடிவெடுத்து, அதை அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கக்கூடிய கருப்பணன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்களின் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். நேற்றைக்கு (நேற்று முன்தினம்) திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த ஹைட்ேரா கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறதே தவிர உள்ளபடியே தைரியத்துடன் கேட்கக்கூடிய தெம்பு இந்த அரசுக்கு இல்லை என்பதுதான் எனது கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினிக்கு வேண்டுகோள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நிருபர்கள், “பெரியார் ஊர்வலம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், “நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். அதுமட்டுமல்ல, அவரிடம் நான் ரொம்ப விரும்பி ேகட்டு கொள்வது, 95 ஆண்டுகாலம் தமிழ் இனத்துக்காகவே வாழ்ந்து போராடி, சமுதாயத்துக்காக வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் பற்றி பேசும் போது, கொஞ்சம் யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என்பதுதான் நண்பர் ரஜினிகாந்துக்கு எனது அன்பான வேண்டுகோள்” என்றார்.


Tags : Citizenship Amendment Act, MK Stalin, Rajini
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்