×

விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரமே முக்கியம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு தடுத்து நிறுத்தும்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி:  புதுச்சேரியில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசே தடுத்து நிறுத்தும். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் தான் முக்கியம் என  முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:ஹைட்ரோ  கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம்  அனுப்பினேன். உள்துறை அமைச்சருக்கும் ஜூன் 10ம் தேதி கடிதமும், ஜூலை 20ம் தேதி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சட்டமன்றத்தில்  தீர்மானம்  நிறைவேற்றியும் அனுப்பி வைத்தோம். மாநில அரசு அனுமதி கொடுக்காது என்பதை உறுதிபட தெரிவித்தோம். இந்நிலையில்  கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது.  அதில், மாநில அரசின் அனுமதி தேவையில்லை. வேதாந்தா நிறுவனம் நேரடியாக பணியை  துவங்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதியும்  ேதவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பறித்து, மக்கள் கருத்துக்கு நேர்மாறாக ஏதேச்சதிகாரத்துடன்  மத்திய அரசு நடந்து கொள்கிறது.

சர்வாதிகார போக்கை தொடர்ந்து தமிழகம்,  புதுச்சேரியில் செலுத்தி வருகின்றனர். மிகவும் காழ்ப்புணர்ச்சி  அடிப்படையில் வடமாநிலங்களில் செயல்படுத்தாத இந்த திட்டங்களை இங்கு கொண்டு வந்து  செயல்படுத்த நினைக்கிறார்கள். எந்த காலத்திலும் இதனை அனுமதிக்க முடியாது. அப்படி மீறி செயல்படுத்த நினைத்தால், மாநில அரசே முன்னின்று  தடுத்து நிறுத்தும். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக  இருக்கிறோம்.எங்களுக்கு விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் தான்  முக்கியம். மக்களின் உணர்வுகளுக்கு துளியும் மத்திய அரசு  மதிப்பளிக்கவில்லை. தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை  எடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதையெல்லாம் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government ,Puducherry ,Narayanaswamy Puducherry ,CM Narayanasamy , Farmers, Fishermen, Chief Minister Narayanaswamy
× RELATED புதுச்சேரி பாகூரில்...