புதுவை கவர்னர் மாளிகைக்கு சிறையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதி மீது சரமாரி தாக்குதல்: செல்போனை காட்டிக்கொடுத்ததால் 8 கைதிகள் வெளுத்துக்கட்டினர்

காலாப்பட்டு: புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதியை, செல்போனை காட்டிக் கொடுத்ததால் சக கைதிகள் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக 8 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுவை மத்திய சிறைச்சாலை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வெளியில் குற்றச்செயல்களை அரங்கேற்றி வருவதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது. சிறைத்துறை அதிகாரிகள், போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்தாலும், செல்போன் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி கவர்னர் மாளிகை, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது.

இது தொடர்பாக பெரியகடை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் டெல்லியை சேர்ந்த ஷர்மா என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக இருக்கும் கனகராஜ் என்பவர் சிறையில் செல்போன் பயன்படுத்தி வந்ததும், அவரிடம் இருந்து ஷர்மா செல்போனை வாங்கி அவருக்கு தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.செல்போனில் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததுடன், சிறையில் தாங்கள் செல்போன் பயன்படுத்துவதையும் காட்டிக் கொடுத்த ஷர்மாவை விசாரணை கைதிகள் கனகராஜ், மடுவுபேட் சுந்தர், சுகன், பாம் ரவி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து சிறை சூப்பிரெண்டிடம் ஷர்மா புகார் அளித்தார். அவரது புகாரை காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு போலீசார் அனுப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: