கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதான 2 தீவிரவாதிகளுக்கு 10 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து தீவிர விசாரணை

நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான 2 தீவிரவாதிகளை 10 நாள் காவலில் விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி அளித்தது.  குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கைதாகி உள்ள தீவிரவாதிகள் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்த தவுபீக் (28) ஆகியோர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.  நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இவர்கள் இருவரும், நாகர்கோவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அருள்முருகன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன், நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் 28 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள் முருகன் 21ம் தேதி (நேற்று) மாலை 3 மணிக்கு இதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி இருந்தார்.  அதன்படி நேற்று மாலை 3 மணிக்கு அப்துல் சமீம், தவுபீக் இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாலை 4.15 மணியளவில், நீதிபதி அருள் முருகன், இருவரையும் 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து 31ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் தவுபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை நீதிமன்றத்தில் இருந்து நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

துப்பாக்கி எங்கே? : எஸ்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி இன்னும் கைப்பற்றப்பட வில்லை. மேலும் அரிவாளும் கிடைக்க வில்லை. எனவே முதற்கட்டமாக துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்காக இருவரையும் போலீசார் கேரளா அழைத்து செல்வார்கள் என கூறப்படுகிறது. கொலை செய்த பின், இருவரும் கேரளா சென்று அங்கிருந்து மங்களூர் வழியாக கர்நாடகா சென்றுள்ளனர். வழியில் துப்பாக்கியை கூட்டாளிகளிடம் கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதாவது குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. இந்த வழக்கில் துப்பாக்கி கண்டுபிடிப்பது தான் மிக முக்கிய தடயம் என்பதால் அதற்கான முயற்சியில்தான் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

பெங்களூரு, கேரளா அழைத்து செல்ல திட்டம்: இது தவிர பெங்களூர், டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரும் தவுபீக் மற்றும் அப்துல் சமீம் கூட்டாளிகள் என கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலைக்கான சதியிலும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே யார், யாருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் இதில் விசாரிக்கப்பட உள்ளது. எனவே இவர்களை கேரளா, கர்நாடகத்துக்கு போலீசார் அழைத்து செல்வார்கள் என கூறப்படுகிறது.

நிரம்பி வழிந்த நீதிமன்றம்

முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று வக்கீல்களால் நிரம்பி இருந்தது. இருக்கைகள் இல்லாமல் வக்கீல்கள் நின்று கொண்டு இருந்தனர். ஏ.டி.எஸ்.பி. விஜயபாஸ்கர், ஏ.எஸ்.பி. ஜவகர், டி.எஸ்.பி.க்கள் கணேசன், ராமச்சந்திரன், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ், கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வக்கீல்களை சந்திக்க அனுமதி மறுப்பு

அரசு வழக்கறிஞர் ஞானசேகர் கூறுகையில், போலீஸ் தரப்பில் 28 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தோம். ஆனால் தற்போது 10 நாட்கள் கொடுத்துள்ளனர். இது போதுமா என்பதை விசாரணை அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு கூடுதல் நாட்கள் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றார். முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போலீஸ் காவல் விசாரணையின் போது, வக்கீல்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு நீதிபதி, அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.

Related Stories: