×

முதல்வரை விமர்சனம் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜூலை 14ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில், பேட்டியளித்தார். அப்போது அவர், இப்போ எது நம்மகிட்ட இருக்கு சொல்லுங்க, எல்லாமே மத்திய அரசு கிட்டதான் இருக்கு, மாநிலம் எதுக்கு, அந்த மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் இருப்பது எதுக்கு. வேலை ஆட்களை கவனிக்க சும்மா ஒப்புக்கு ஒரு மேஸ்திரி போடுவோம்ல அதுமாதிரி தான் தமிழக முதல்வர் தற்போது உள்ளார். எந்த உரிமையும் நம்மிடம் இல்லை’ என பேசியிருந்தார். இந்த பேட்டியில் தமிழக முதல்வரை அவதூறாக பேசியிருப்பதாக கூறி, தமிழக அரசின் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைதொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Tags : Seaman , CM, Seaman
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...