×

மூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமில்லை: மக்களின் சந்தேகங்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி 1995ம் ஆண்டு ‘பேட்ச்’ டாக்டர் சந்தோஷ் பாபு திடீரென்று ‘விருப்ப ஓய்வில்’ செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் அரசு செயலாளராக இருக்கும் இவரின் கீழ்தான்,  தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனம் - 12,524 கிராம பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2441 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் 2015ல் 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, பிறகு தற்போதைய முதல்வர் பழனிசாமியால் 110வது விதி அறிவிப்பின் கீழ் மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதலில் 1230.90 கோடி ரூபாயாக இருந்த திட்டம், பிறகு 2441 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘பாரத் நெட்’, ‘தமிழ்நெட்’ செயலாக்கம் குறித்த பணிகள்  விவகாரத்தில் நடக்கும் திரைமறைவு ரகசியங்களும், மர்மங்களும் என்ன?. அதைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏன் திடீர் விருப்ப ஓய்வு கோரினார்.

இவரது முழுப்பொறுப்பில் இருந்த தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனத்தை திடீரென்று விடுவித்து புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தது ஏன்,  ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ‘விருப்ப ஓய்வில்’ செல்லும் அளவிற்கு அழுத்தம் கொடுத்தது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரா, முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற மறுதினம் ஏன் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது என்று எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உரிய விளக்கம் அளித்திட  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளர் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும், பாரத் நெட், தமிழ்நெட் செயலாக்கம் தொடர்பான பணிகளில் எவ்வித ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல்,  வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


Tags : IAS officer ,retirement ,IAS ,Stalin , Senior IAS officer, IAS officers, AIADMK regime, MK Stalin
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு