ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டத்தை மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறு அமைக்கும் திட்டத்தின் சாதக, பாதகங்களை விளக்கி மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த், ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளனர். விஜயகாந்த் (தேமுதிக தலை வர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்தி, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி விளக்கம் கொடுக்கவேண்டும். இந்த திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதனால் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும். மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகதான்.

அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தமிழகத்தில்  விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட வேறு எந்த ஒரு  திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது  முக்கியமானது.

எனவே, தமிழக டெல்டா விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம்  சம்பந்தமாக ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்க வேண்டும்.  விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை  கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர்): ஹைட்ரோ  கார்பன் தொடர்பான திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதியும்,  திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்தும் கேட்கப்பட வேண்டும் என்ற 2006ம்  ஆண்டு கொண்டுவரப்பட்ட விதியில் திருத்தம் செய்து, இனி அத்தகைய அனுமதியையோ,  பொதுமக்களின் கருத்துகளையோ கேட்கத் தேவையில்லை என்று அரசிதழில்  வெளியிட்டுள்ளது மத்திய பாஜஅரசு. பாஜ அரசின் இத்தகைய ஏதேச்சதிகார போக்கை  வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  அனுமதி இல்லை எனவும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாகவும் அறிவிக்கும் கொள்கை முடிவை சட்டமன்ற தீர்மானம் மூலம் உடனடியாக  மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: