போலி பத்திரிகையாளர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிடப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் ‘‘பத்திரிகையாளர்’’ என்ற போர்வையில் உலவி வரும் மோசடி பேர்வழிகள் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றமே சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, மனுதாரர் உண்மையான பத்திரிகையாளர்தானா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவரது வக்கீலிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் அடையாள அட்டையை அவரது வக்கீல் நீதிபதிகளிடம் வழங்கினார். அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது. இதை பார்த்த நீதிபதிகள், அதிர்ச்சியடைந்து, மனுதாரருக்கும் காதர் பாஷாவுக்கும் என்ன தொடர்பு, காதர் பாஷாவின் போலீஸ் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் மனோகரன் ஆஜராகி, உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அடையாள அட்டையை வழங்குவது குறித்து அரசு புதிய விதிகளை வகுத்துள்ளது.

இந்த விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட உள்ளது. பத்திரிகை விற்பனை அளவை கணக்கிடும் ‘‘ஆடிட் பீரோ ஆப் சர்குலேசனில்’’ இந்த பத்திரிைககள் வருகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலி பத்திரிகைகளை இனம்காண முடியும் என்றார். அப்போது, தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், நீதிபதியிடம், பல்வேறு மாவட்டங்களில் போலி பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.

அப்போது, சந்தியா ரவிச்சந்திரன், பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் மனுக்களை தாக்கல் செய்தனர். வக்கீல் சூரியபிரகாசத்தின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக பத்திரிகையாளர் மணிகண்டனை நீதிமன்றம் தானாக முன்வந்து இணைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் அமைப்பு சார்பில் வக்கீல் ஆஜராகியுள்ளார். பிரஸ்கிளப் மற்றும் ரிப்போர்டர்ஸ் கில்டு சார்பில் ஒருவரும் ஆஜராகவில்லை. எனவே, அவர்களுக்கு புதிதாக நோட்டீசை இமெயில், கூரியர், வாட்ஸ் அப் மூலம் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் ‘‘ஆடிட் பீரோ ஆப் சர்குலேசனை’’ இணைத்து உத்தரவிடப்படுகிறது.

போலி பத்திரிகையாளர்கள் தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். தொழிலதிபர்களையும், அரசு அதிகாரிகளையும் பிளாக் மெயில் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் முடிவுக்கு வந்தால் போலி பத்திரிகையாளர்களை இனம்கண்டு அவர்களின் விவரங்களை சேகரிக்க இந்த நீதிமன்றம் ஒரு சிறப்பு குழுவை அமைக்கும். போலி பத்திரிகையாளர்கள் குறிப்பிடும் பத்திரிகைகளின் விற்பனை அளவு, அந்த நிறுவனங்களின் முதல் பிரதி, அந்த பத்திரிகையாளர்களின் வருமானவரி கணக்கு, அவர்களின் சொத்து கணக்கு, வருமானம், அவர்கள் முறையான பத்திரிகையாளர்கள்தானா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்படும். வழக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: