×

மக்கள் நலன், தேசிய ஒற்றுமை-ஒருமைப்பாட்டை கருதி என்பிஆர், என்ஆர்சி தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: அதிமுக அரசுக்கு திமுக தலைமை செயற்குழு வேண்டுகோள்

சென்னை: திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அணி தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மதியம் 1 மணி வரை நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவிற்கு மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு செயற்குழு கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
* மாநிலத் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆளும் அதிமுக நேரடியாகக் கூட்டணி வைத்து”,அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டாலும், இவற்றையெல்லாம் மீறி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது, வெற்றிக்கு இரவு பகல் பாராமல் உழைத்த, திமுகவினருக்கும்-செயல்வீரர்களுக்கும் - கூட்டணிக் கட்சிகளின் தோழர்களுக்கும் - ஒருமுறைக்கு இருமுறை, நள்ளிரவிலும்கூட, மாநிலத் தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து, அதிமுகவின் தேர்தல் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து முறையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் செயற்குழுக் கூட்டம் மனம் நிறைந்த பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. திமுகவின் சார்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களும் - துணைத் தலைவர்களும்-வார்டு உறுப்பினர்களும் நேர்மையான, திறமையான, வெளிப்படையான தங்களது பணிகளின் மூலம் மக்களுக்கு நல்லதொரு உள்ளாட்சி நிர்வாகத்தினை அளித்திட வேண்டும்.

* தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்கான புதிய படிவங்களில் உள்ள கேள்விகள், “குடிமக்களை சந்தேகத்திற்கு உரியவர்களாக பதிவு செய்யலாம்” என்று மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், தகவல் அளிக்காதோர் மீது வழக்குப் போடும் அதிகாரம் அனைத்தும் நேர்மையானதொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிகுறிகளாக இல்லை என்பது ஆட்சியில் இருக்கும் அதிமுகவிற்கு தெரிந்திருந்தும்- மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தி, அனைத்து தரப்பு மக்களையும் துயரத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கும் பா.ஜ.வின் செயலுக்கு உள்நோக்கத்துடன் துணை போவது மன்னிக்க முடியாத மாபாதகம் என்று செயற்குழு,  அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. ஆகவே, தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை - ஒருமைப்பாடு கருதியும் “தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)  தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும்.

* பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில் பேசிய போதும் இதை ஆணித்தரமாக திமுக வலியுறுத்தியிருப்பதை செயற்குழு பதிவு செய்து, இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும், அவர்தம் விருப்பத்தின் அடிப்படையில், எவ்வித காலதாமதமும் இன்றி இந்தியக் குடியுரிமை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அதிமுக அரசு, இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசும் தமது இரட்டை நாக்குப் போக்கைக் கைவிட்டு, இந்திய குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

* அ.தி.மு.க. அரசின் அடிமைத்தனத்தால் ஹைட்ரோ கார்பனுக்கு “சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” என்ற மத்திய அரசின் உத்தரவை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், மாநில அரசே செய்ய வேண்டியதைச் செய்யாமல், மத்திய அரசிடம் மண்டியிட்டு, கடிதத்துடன் கையேந்தி நிற்கிறது.
* தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுகள் உள்பட பல தேர்வுகளில் வரலாறு காணாத குளறுபடிகளை உருவாக்கி, தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையினை பாழ்படுத்தி விட்டது.
* அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் எதிர்ப்பு வழக்கு விசாரணைகளில், கூச்சமே இன்றி  நேரடியாகத் தலையிடுகிறது.

* 1.50 லட்சம் கோடி கடனுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகி மூழ்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.
* 14,314.76 கோடி ரூபாய் வருவாய்ப்  பற்றாக்குறையில் தமிழகம் வழிதவறித்  திண்டாடுகிறது.
* 44,176.36 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையில் நிதிநிலைமை திசைமாறித் திணறுகிறது.
* மக்கள் தலையில் 3,97,495.96 கோடி ரூபாய் கடனைச் சுமத்திக் கலக்கம் அடைய வைத்திருக்கிறது.

* காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத பரிதாப நிலையில் மாநில சட்டம் - ஒழுங்கு படுதோல்வி கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கிப் பரவிட அனுமதித்து விட்டது.
* ஆவின் பால் விலையை உயர்த்திய அரசு - இப்போது தனியார் பால் விலை உயர்வையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து - ஏழை எளிய மக்களை, குழந்தைகளை, முதியோரை துயரத்திற்குள்ளாக்கி இருக்கிறது.
* வேலை இல்லாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதில் அகில இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம் என்ற மிகுந்த அவல நிலையை உருவாக்கியுள்ளது.

* 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துடன் விபரீத விளையாட்டு நடத்துகிறது.
* குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக ரீதியில் அமைதியான அறப்போராட்டங்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், மக்கள் மீது அநியாயமாக வழக்கு - அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது.
* உள்ளாட்சித் தேர்தலில் ஊரறிய அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் செய்து - தேர்தல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்துவிட்டது.
இவை போன்ற எண்ணற்ற தோல்விகளால், மாநிலத்தின் நலனும் - வளர்ச்சியும் - வாழ்வும் குன்றிவிட்டன. எனவே, மக்கள் விரோத-தமிழக உரிமைகளை சுய லாபத்திற்காகத் தாரை வார்க்கிற-ஊழல் சகதியில் மூழ்கிக் கிடக்கின்ற அதிமுக அரசின் முகமூடியை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அதன் மோசடி சொரூபத்தை ஊரெங்கும் உணர்த்திட இந்தச் செயற்குழு சபதம் ஏற்கிறது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : NRC ,NPR ,DMK ,Tamil Nadu ,chief executive appeals ,government ,AIADMK , People's Welfare, National Unity, NPR, NRC, Tamil Nadu, AIADMK Government, DMK Chief Executive
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...