போதிய நிதி இருந்தாலும் முடிவெடுக்கும் திறன் அரசுக்கு இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி குற்றச்சாட்டு

நாக்பூர்: மத்திய அரசிடம் வளர்ச்சித் திட்டங்களுக்கான போதிய நிதி இருந்தாலும், முடிவுகள் எடுக்கும் திறன் அதற்கு போதாது என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நிதின் கட்கரி அவ்வப்போது மத்திய அரசு மற்றும் பாஜ.வை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் இந்த அளவுக்கு வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பதால்தான் வாக்குறுதிகளை பாஜ அள்ளி வீசியதாக கடந்த அக்டோபர் மாதம் கட்கரி கூறினார். சமீபத்தில் மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ தோல்வியடைந்தபோது, தோல்விக்கு கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று அதிரடியாக பேசினார். வெற்றிக்கு உரிமை கோரும் தலைமை தோல்விக்கு பொறுப்பேற்பதில்லை என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு முடிவுகளை எடுக்கும் திறன் குறைவு என்று இப்போது அவர் கூறியிருக்கிறார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடிக்கான வேலைகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளேன். இந்த ஆண்டில் ரூ.5 லட்சம் கோடிக்கான வேலைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். மத்திய அரசிடம் பணத்துக்கு பற்றாக்குறை கிடையாது. ஆனால் முடிவுகளை எடுக்கும் திறன்தான் குறைவாக இருக்கிறது. அதனால் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

Related Stories: