5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தமிழகத்திலும் பிற மாநிலத்தை போலத்தான் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்களின் திறனை கண்டறிவதற்காகத்தான் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் பிற மாநிலங்களை பின்பற்றித்தான் தமிழகத்திலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளியிலேயே தேர்வை எழுதுவதா வேறு மையத்தில் தேர்வை மாணவர்கள் எழுதுவதா என்ற குழப்பம் சில நாட்களாக நீடித்து வந்தது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த இந்திய பட்டயக் கணக்காயர் அமைப்பினர் 7வது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிளஸ்2 வகுப்பில் வணிகவியல், பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு சிஏ பயிற்சி அளிக்க வசதியாக பிளஸ்2 தேர்வு எழுதிய பிறகு பயிற்சி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்ைக எடுத்துள்ளது. அதற்கேற்ப பாடத்திட்டத்தையும் உருவாக்கியுள்ளோம்.

தமிழகம் முழுவதும் சிஏ பயிற்சி பெற விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் பயிற்சி வகுப்புகளை ஐசிஏஐ அமைப்புடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை நடத்தும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டும். அவர்கள் தேர்வு எழுத வசதியாக அருகாமை பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அளவில் மாதிரி கேள்வித்தாள் தயாரித்து விரைவில் வெளியிடப்படும். பிற மாநிலங்களை பின்பற்றியே பொதுத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* படிக்கும் பள்ளிகளில் தேர்வு

தேர்வு எழுதுவது குறித்து தொடக்க கல்வித்துறையின் இயக்குநரும், தேர்வு மையம் குறித்து தெரிவிக்கும் போது, 5, 8ம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவித்தார். ஆனால் நேற்று மாலை வரை இது குறித்து அறிவிப்பு ஏதும் தொடக்க கல்வித்துறை வெளியிடவில்லை.

* நீட் தேர்வுக்கான பயிற்சி நடக்குமா?

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளதால் தற்போது நீட் தேர்வு பயிற்சி அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது என்றார். அதிகாரிகள் கூறுகையில் கடந்த ஆண்டு வரை நீட் பயிற்சி அளித்த நிறுவனம் தற்போது அதிலிருந்து விலகிவிட்டதால், வேறு நிறுவனத்தை வைத்து பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனால் கால தாமதம் ஆகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த குழப்பம் காரணமாக நீட் பயிற்சி நடப்பது சந்தேகமாக இருக்கிறது.

Related Stories: