×

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எதையும் ஏற்கமாட்டோம்: ஆத்தூர் கூட்டத்தில் முதல்வர் உறுதி

ஆத்தூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எந்த விதிகளையும் ஏற்கமாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.  எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று இரவு நடந்தது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை விட, இந்த தேர்தலில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. ஆத்தூர் அருகே தலைவாசல் கூட்டு ரோட்டில் 1866 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா, பிரமாண்டமாக உருவாகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, பிப்ரவரி 7ம்தேதி நடக்கிறது.

இது விவசாயிகளுக்கான பூமி. அவர்களுக்கு நன்மை கிடைக்கும் திட்டம் என்பதால், நானே அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறேன். இதில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையம், ஆடு,கோழிகளை நவீன முறையில் சுத்தப்படுத்தி மக்களுக்கு சுகாதாரமான இறைச்சி விற்கும் கூடங்கள் உருவாக்கப்படும். விவசாயிகள் எந்த கன்றுகள் வேண்டுமென்றாலும் அதை உருவாக்கித் தருவதற்கான மையம் அமைக்கப்படும். அதே நேரத்தில் நாட்டின மாடுகளையும், காளைகளையும் பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்கும் சிறப்பு மையமும் அமைக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கான காளைகளும் இந்த மையத்தில் உருவாக்கித் தரப்படும். இந்த கால்நடை பண்ணையால் சுற்றுப்புற மாவட்டங்கள் அனைத்தும் பெரும் வளர்ச்சி பெறும்.

கள்ளக்குறிச்சி, அரியலூரில் புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும். ஏற்கனவே ஓராண்டில் 9 அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கிய பெருமை அதிமுக அரசுக்கு கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் கனவான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கொண்டு வந்துள்ளோம்.கல்வியிலும், நிர்வாகத்திறமையிலும், சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சீனஅதிபரும், இந்திய பிரதமரும் சந்தித்து பேசும் பாதுகாப்பு நிறைந்த இடமாக தமிழகம் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்து 134 விருதுகளை வாங்கியுள்ளோம்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இதுவரை தமிழகத்திற்கு உரிய அறிவிப்பு வரவில்லை. ஆனாலும் பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் கூறுகிறது. எனவே இதில் 2011ம் ஆண்டு, நடைமுறையையே நாங்களும் பின்பற்றுவோம் என்று அறிவிக்க வேண்டியது கடமையாக உள்ளது. சிறுபான்மை மக்களை பாதிக்கும் எந்த விதிகளையும் ஏற்கமாட்டோம். குறிப்பாக இந்த அரசு எப்போதும் இஸ்லாமியர்களுக்கும், இதர சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Tags : Chief Minister ,Attur ,meeting ,Aathur ,minority population ,CM , Population, census, minority, affecting, Athur meeting, Chief Minister confirmed
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...