காஸ் வெல்டிங் மூலம் கதவை உடைத்து வங்கியில் துணிகர கொள்ளை முயற்சி

* தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு

* தீ விபத்தால் மர்ம கும்பல் ஓட்டம்

* பல கோடி நகை, பணம் தப்பியது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காஸ் வெல்டிங் வைத்து கொள்ளையடிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கொள்ளையர்கள ஓட்டம் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் தனியார் கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். அஞ்செட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராம மக்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வங்கிக்கு முகமூடி அணிந்து கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள், வங்கியின் பின்புறம் ஏணி வைத்து மாடியில் ஏறியுள்ளனர். அங்குள்ள பாத்ரூம் வழியாக, காஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று, கேட்டை காஸ் வெல்டிங் வைத்து தகர்த்துள்ளனர்.

அவர்கள் வெல்டிங் வைத்தபோது, எதிர்பாராதவிதமாக பழைய பேப்பர் மற்றும் பொருட்களில் தீப்பற்றி, மளமளவென பரவியதோடு, காஸ் வெல்டிங் பைப்பிலும் பற்றிது. இதில் பைப் வெடித்து, தீ மேலும் அதிகமானது. கொள்ளையர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பயந்துபோன அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு வந்த வழியாக தப்பி சென்றுள்ளனர். இதனால், வங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை,பணம் தப்பியது. நேற்று அதிகாலை 4 மணியளவில் வங்கியின் பின்புறமிருந்து கரும்புகை வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, அஞ்செட்டி போலீசார் வந்து, பார்வையிட்டனர். பின்னர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் கொள்ளையர்கள் விட்டு சென்ற காஸ் சிலிண்டர், வெல்டிங் பொருட்கள், கடப்பாரை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், வங்கி மற்றும் ஏடிஎம்மிற்கு இரவு காவலாளி இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்துள்ளனர். இதில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். வங்கியின் முன்பகுதியில் மட்டும் சிசிடிவி கேமரா உள்ளது. மேலும், வங்கிக்கு வரும் வழியில் வேறு எங்காவது சிசிடிவி கேமரா உள்ளதா என கண்காணித்து வருகிறோம் என்றனர். வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அஞ்செட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: