×

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டத்தில் 27ம் தேதி முதல் போராட்டம்: மீனவ அமைப்பு, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு முடிவு

மயிலாடுதுறை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மீனவ மற்றும் தோழமை அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் நடந்தது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறுகள் அமைக்க இனி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் இல்லை. மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்த தேவையில்லை என்று கூறுவது மக்களுக்கு விரோதமானது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பு போன்ற தொழில்கள் “ஏ- பிரிவை’’ சேர்ந்தவை. இத்தகைய தொழில்களைத் தொடங்க பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தியாக வேண்டும். காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரும் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் இந்திய அரசு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கைக்கு செவிமடுத்து ‘’ஏ’’ பிரிவு தொழில்பட்டியலில் இருக்கும் எண்ணெய் - எரிவாயு எடுப்பை தன் விருப்பப்படி பி-2 என்ற பிரிவுக்கு மாற்றியுள்ளது கண்டனத்துக்குரியது.

ஹைட்ரோகார்பன் கிணறுகளில், 634 வகை ரசாயனங்களை பயன்படுத்தும் நீரியல்விரிசல் முறை பயன்படுத்தப்பட இருப்பதால் கடற்பகுதி ரசாயன மயமாகும். கிழக்கு கடற்பகுதியில் மீன்வளம் அழியும். மீனவர்களின் மீன்பிடித் தொழில் அழிந்து போகும். இதை எதிர்த்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மீனவ மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் வரும் 27ம் தேதி முதல் காவிரிப்படுகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். முதல்கட்டமாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், புதுச்சேரி, காரைக்கால், கடலூர் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நடத்தப்படும்.

Tags : fight ,Delta District ,Protest , Hydrocarbon Project Against, Delta District, 27th Struggle, Fisheries Organization
× RELATED அர்ஜெண்டினாவில்...