×

டாஸ்மாக் கடைகள் குறித்து முடிவெடுக்க கிராமசபை சட்டத்தில் திருத்தம்

* மக்கள் நலன்தான் மிக முக்கியம்
* தமிழக அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கான இடம் தேர்வு செய்வது குறித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், அதை செயல்படுத்த ஏன் சட்ட திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் கார்த்திகேயன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முழு அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் கடைகளுக்கான இடம் தேர்வு மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் வழங்குவது குறித்து எந்த துறை ரீதியான கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளுக்கான இடம் தேர்வு, அவற்றை நிராகரிப்பது குறித்து பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்கும் வகையில் ஏதாவது சட்டம் கொண்டுவரப்படுமா?

பெரிய அளவில் மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மதுக்கடைகள் திறக்கும் அரசு, மதுக்கடைகளால் மக்களின் மதிப்புள்ள வாழ்வு சீரழிகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு மதுவிற்பனையை ஒரு பணியாக செய்து வருகிறது. மக்கள் நலன்சார்ந்த ஒரு மாதிரி அரசாக இருக்க வேண்டும். மக்களின் சுகாதாரம், சமூக நலன் ஆகியவற்றில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் உள்ளாட்சிகளின் நிலையை முக்கியமாக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில் மதுக்கடைகளை திறப்பது, தனி மனிதர்கள் எந்த இடங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது குறித்து அரசு ஆழ்ந்து எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகளை திறக்க வேண்டும், எங்கெல்லாம் மது அருந்த அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்து அரசு உரிய வழிகாட்டுதல்களை கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதற்கு முன்பு தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சரியான முடிவை எடுப்பார் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, மது விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்னை. இது தமிழகத்திற்கு மட்டுமான பிரச்னையல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட பாமக தரப்பு வக்கீல் கே.பாலு, ‘‘ஏற்கனவே தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கடைகளை குறைப்பதாக தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து விற்பனை செய்கின்றனர்’’ என்றார்.  இதைக்கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும், அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அரசு முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

Tags : Task Shops Task Shops on Amendment , Task Shops, Decision Making, Gram Sabha Law, Amendment
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...