டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து சுனில் யாதவ், ரோமேஷ் சபர்வால் போட்டி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், முதல்வர் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரசின் ரோமேஷ், பாஜகவின் சுனில் யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ்  கூட்டணியில் ஆர்ஜேடி கட்சிக்கு 4 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக 67 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த 1998 முதல் 2013ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை டெல்லி சட்டப் பேரவையை கைப்பற்றிய காங்கிரஸ், ஏற்கனவே 54  வேட்பாளர்களின் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டது. மேலும் ஏழு வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது,

ஆளும் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகி ரோமேஷ் சபர்வாலை நிறுத்தி உள்ளனர். சபர்வாலைத்  தவிர, திலக் நகர் தொகுதியைச் சேர்ந்த ரமிந்தர் சிங் பம்ரா, ராஜீந்தர் நகரைச் சேர்ந்த ராக்கி டூசீட், பதர்பூரைச் சேர்ந்த பிரமோத் குமார் யாதவ், கோண்ட்லியைச் சேர்ந்த அமரீஷ் கவுதம், கோண்டாவைச் சேர்ந்த பீஷம் சர்மா, கரவால் நகரைச்  சேர்ந்த அர்பிந்த் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டாளியான ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு (ஆர்ஜேடி) நான்கு இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு  பிப். 8ம் தேதியும், பிப். 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  வேட்புமனுத்தாக்கல் செய்ய நேற்று ஊர்வலமாக சென்றார். அப்போது வழிநெடுங்கும் இருந்த தொண்டர்கள் அவரை, உற்சாகமாக வரவேற்றனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் தாமதமாக சென்றார்.  வேட்பாளர்கள் தங்களது  வேட்புமனுக்களை பிற்பகல் 3 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் கெஜ்ரிவால் தாமதமாக சென்றதால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார். இந்நிலையில், இன்று 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வேட்பு  மனுத்தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, பாஜக தலைமை இன்று அதிகாலை 1 மணியளவில் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புதுடெல்லி தொகுதி வேட்பாளராக சுனில் யாதவ் என்பவரை அறிவித்துள்ளது.  டெல்லியின் பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவரான இவர், தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். டெல்லி சட்டமன்றத்தில் 70 இடங்கள் உள்ளன. 67 இடங்களில் போட்டியிடும் பாஜக, மீதமுள்ள மூன்று இடங்களில் தங்களது கூட்டாளி  கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது.

Related Stories: