சாதி சான்றிதழ் கோரி 2ம் நாளாக கோயிலில் மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி: சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, காரைக்குடியில் பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவ, மாணவிகள் 2ம் நாளாக இன்றும் கோயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை,  திருப்புத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட காட்டுநாயக்கன் (பழங்குடியினர்) சமூகத்தினர் வசித்து  வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும்  இந்த சமூகத்தை சேர்ந்த யாருக்கும் இதுவரை பழங்குடியின சாதி சான்றிதழ்  வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இந்த சமூகத்தை  சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. ஆனால்  சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சான்றிதழ்  வழங்கப்படவில்லை. இதனால் இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு  அடிப்படையில் அரசு வேலைக்கு செல்ல முடியாத நிலையில்  உள்ளனர். பல ஆண்டுகளாக சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். சாதிச் சான்றிதழ் வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணி பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கர் இன மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளிக்கு செல்லாமல் இங்குள்ள மாரியம்மன் கோயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. 2வது நாளாக இன்றும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கோயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இன்று பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘பழங்குடியின மக்கள் என சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால்தான் போராட்டத்தை கை விடுவோம்’ என்றனர்.

Related Stories: