×

கலவை பேரூராட்சியில் குடிநீர், கழிவறை உள்பட அடிப்படை வசதி இல்லாத கிளை நூலகம்

கலவை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூராட்சி கீழாண்டைபேட்டையில் வேலூர் மாவட்ட கிளை நூலகம்  பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை கலவை மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நூலகராக வாலாஜாவை சேர்ந்த நிஷா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நூலகத்தில் இடவசதி குறைவாக இருப்பதால் அதிகளவு புத்தகங்கள் இருந்தாலும் அவற்றை வைக்க இடமின்றி தரையில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள் படிக்கும் பிரிவு மிக சிறியதாக உள்ளதால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இங்கு அமரவும், படிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 8 பேருக்கு மேல் உள்ளே அமர முடியாது. அதேபோல் நூலகத்தை சுற்றி புற்கள், புதர்கள் அதிகளவு இருப்பதால் வெளியில் நின்று படிக்கவும் இடமின்றி தவிக்கின்றனர். மேலும் இங்கு குடிநீர், கழிவறை வசதியும் இல்லை. இதனால் பலர் நூலகத்திற்கு வருவதை தவிர்க்கின்றனர்.

எனவே, தாலுகா அந்தஸ்து பெற்ற கலவை பேரூராட்சியில் உள்ள இந்த கிளை நூலகத்தை விரிவுபடுத்தி மேலும் அதிக புத்தகங்களை வைக்க வேண்டும், கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்தி, சீரான குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் நலன் கருதி போட்டித்தேர்வுக்கு தேவையான பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்களை அதிகளவு வைக்கவேண்டும். இப்பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sucursal , Bar compuesto, agua potable, baño, infraestructura, biblioteca sucursal
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு