அமித் ஷாவின் கற்பனையில் உருவான ‘துக்டே துக்டே கும்பல்’ குறித்து தகவல் இல்லை: உள்துறை அமைச்சகத்திடம் கேட்ட கேள்விக்கு பதில்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கற்பனையில் உருவான ‘துக்டே துக்டே கும்பல்’ குறித்து எந்த தகவலும் இல்லை என்று, உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் உச்சமடைந்து வன்முறை சம்பவங்கள் நடந்த போது, ​மத்திய ​உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘துக்டே துக்டே (இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்காக சிறு சிறு குழுக்களாக செயல்படும் அமைப்புகள் குறித்து ‘குறி’ சொல்லாக பாஜக பயன்படுத்தப்படுத்தும் வார்த்தை) கும்பல்தான் வன்முறைக்கு காரணம். காங்கிரஸ் தலைமையிலான துக்டே  துக்டே கும்பலை தண்டிக்க வேண்டிய நேரம் இது என்பதை கூற விரும்புகிறேன். டெல்லியில் நடக்கும் வன்முறைக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

Advertising
Advertising

டெல்லி மக்கள் துக்டே துக்டே கும்பலை தண்டிக்க வேண்டும்” என்று பேசினார். முன்னதாக, 2019 மே மாதம் நடந்த தேர்தல் பிரசார பேரணியின் போது பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைமையில் ‘துக்டே துக்டே’ கும்பல் குறித்து பேசினார். இருந்தும், அமித் ஷா பேசிய ‘துக்டே துக்டே கும்பல்’ என்ற வாசகம் வடமாநிலங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் ஜே.என்.யூ  மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது பாஜக-வின் பிரசார மேடைகளில் துக்டே துக்டே இடம் பெற்றிருந்தது. இந்த சொல் தற்போது சமூக வலைதளங்களில் சிக்கியுள்ளது. பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத எவரையும், துக்டே துக்டே கும்பல் என்று முத்திரை குத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில்தான் இப்படி என்றால் மத்திய அரசு மற்றும் பாஜ ஆளும் மாநில அரசில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒரு கூட்டு குறிச்சொல்லாக அமைந்துள்ளது. நகர்ப்புற  நக்சல்கள், தேசவிரோதிகள், துக்டே துக்டே கும்பல் மற்றும் லிப்டார்ட்ஸ் என்ற பல பெயர்களை முன்வைத்து இணையத்தில் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் இந்த குறிச்சொற்களை  பயன்படுத்தி சில தலைவர்களை அடையாளப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா கூறுகையில், “அவர்கள்  எங்களை துக்டே துக்டே கும்பலின் உறுப்பினர்கள் என்று அழைக்கிறார்கள்.  முகத்தை மறைக்காமல் நான் இங்கே சாலையில் மக்களுக்காக நிற்கிறேன். ஆமாம், நான் துக்டே  துக்டே கும்பலைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலின்படி, அத்தகைய கும்பல் நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுவில், ‘“துக்டே துக்டே கும்பல் அமைப்பின் தோற்றம் என்ன? சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்  சட்டத்தின் கீழ் அந்த கும்பல் ஏன் தடை செய்யப்படவில்லை? அதன் உறுப்பினர்கள்  யார்?’ என்பது போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், ‘துக்டே துக்டே கும்பல் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் எந்த தகவலும் இல்லை’ என்று பதில் அளித்துள்ளது. உள்துறை அமைச்சகத்திலிருந்து தனக்கு கிடைத்த பதிலை ட்வீட் செய்த கோகலே, ‘துக்டே துக்டே கும்பல் நாட்டில் அதிகாரப்பூர்வமாக இல்லை; அது அமித் ஷாவின் கற்பனையில் உருவான ஒரு உருவம் மட்டுமே’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: