×

தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இன்னமும் சபாநாயகரிடம் இருக்க வேண்டுமா?: மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

டெல்லி: எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகர் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த  2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் தௌநாஜாம் ஷியாம்குமார் ஆண்ட்ரோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளை  கைப்பற்றியது. இருப்பினும், பெரும்பான்மைக்குத்(30) தேவையான இடங்கள் இல்லாததால், பாஜக 21 தொகுதிகளை கைப்பற்றிய நிலையிலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷியாம்குமார், தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து மாநில  வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார். இதற்கிடையே, அவர் மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த  வழக்கு இன்று நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கில், ‘சபாநாயகர் ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் அவரால் தன்னிச்சையாக தகுதி நீக்கம் தொடர்பாக முடிவு எடுக்க முடியுமா? எம்.பி, எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இன்னமும் சபாநாயகரிடம்  இருக்க வேண்டுமா? என்பதை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நிரந்தர அமைப்பையோ அல்லது தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு  அமைப்பையோ உருவாக்கலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Speaker ,Parliament ,The Supreme Court ,instructors , Should the Speaker still have the power to disqualify ?: Supreme Court instructs Parliament to reconsider
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...