திருநீர்மலை பிரதான சாலையில் நடைபாதையில் வாகனம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் கடும் தவிப்பு

பல்லாவரம்: திருநீர்மலை பிரதான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். சென்னை பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. நாகல்கேணி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் திருமுடிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்துவரும் வாகனங்களும் மேற்கண்ட சாலையைத்தான் பயன்படுத்துகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருநீர்மலை பிரதான சாலை மிகவும் குறுகி காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

பாதசாரிகள் நடந்துசெல்வதற்கு வசதியாக பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து நாகல்கேணி வரை திருநீர்மலை செல்லும் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எளிதாக நடந்து சென்றனர். ஆனால் சமீபகாலமாக நடைமேடையை ஆக்கிரமித்து  பைக் மற்றும் கார்களை நிறுத்துகின்றனர். இதனால் மக்கள் நடந்துசெல்வதற்கு முடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் இறங்கி நடப்பதால் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

எனவே, பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் நடைமேடையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவேண்டும். மீறி வாகனங்கள் நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

Related Stories: