குடிமகன்கள் கேட்பது இல்லை விரும்பாத சரக்கு குவியுது: டாஸ்மாக் குளறுபடிகள்; ஊழியர்கள் குமுறல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை இறக்குமதி செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: மதுபானங்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் நுகர்வோர் விரும்பும் மதுபானங்களை கடைகளில் இறக்குமதி  செய்வதில்லை. மாறாக மாவட்ட மேலாளர்கள் மற்றும் நிர்வாகம் தரப்பின் விருப்பப்படி மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால்,  கடைகளில் மதுபானங்கள் 90 நாளைக்கு மேலும் தேங்கி விடுகிறது. விற்பனையாகாத மதுபானங்களை கடைகளில் இறக்குமதி செய்வதன் மூலம் பெரும் தொகை இழப்பு ஏற்படுகிறது.

மேலும், அட்டை பெட்டிகளை கடைகளில் இருந்து சேகரிக்க  டெண்டர் எடுத்த நபர்கள் மார்க்கெட்டில் விலை குறைந்ததால் அட்டைப் பெட்டிகளை  சேகரிக்க வருவதில்லை. காலி அட்டைபெட்டிகளை சேகரித்து வைக்க கடைகளில் போதிய  இடவசதியும் இல்லை. எனவே, அட்டைப்பெட்டிகளை  எடுத்து செல்ல மாற்று நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதேபோல்,  கடைகளில் மதுபானங்களை இறக்கி வைக்க ஒரு பெட்டிக்கு ரூ15 முதல் ரூ20 வரை  கட்டாயப்படுத்தி பெறுகின்றனர்.

குறிப்பாக, ஒரு கடைக்கு 20 பெட்டிகளை  இறக்குமதி செய்தால் ரூ350 முதல் ரூ400 வரை கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், மாதம்தோறும் ரூ2 ஆயிரம் வரை ஊழியர்களின் சொந்த பணத்தை கொடுக்கும் நிலை உள்ளது. எனவே, கேரளாவில் உள்ளது போன்று இறக்குமதி கூலியை நிர்வாகமே ஏற்க வேண்டும். மதுபானங்களை இறக்குமதி செய்வதில் ஏற்படும் இதுபோன்ற குளறுபடிகளை களைய நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: