நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

டெல்லி: நேபாளத்திற்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் டாமன் நகரில் ஓட்டல் ஒன்றில் கேரளாவை சேர்ந்த 8 பேர் தங்கிஇருந்தனர். டாமன் என்ற இடத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த 8 பேரும் காலையில் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், மாற்று சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது 8 பேரும் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.

இதுபற்றி மக்வான்பூர் நகர காவல் அதிகாரி சுஷில் சிங் ரத்தோர் கூறும்பொழுது, உயிரிழந்தவர்கள் 8 பேர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரவின் குமார் நாயர்(39), சரண்யா(34), ரஞ்சித் குமார்(39), இந்து ரஞ்சித்(34), ஸ்ரீபத்ரா(9), அபினவ் சூர்யா(9), அபி நாயர்(7) மற்றும் வைஷ்னவ் ரஞ்சித்(2) என்பது தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்றிரவு கேஸ் ஹீட்டரை பயன்படுத்தினர் என்றும், அதில் ஏற்பட்ட வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்.

இதனிடையே இது தொடர்பாக நேபாள நாட்டில் கேரள சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். மேலும் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேபாளத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என கூறினார்.

மேலும் நேபாளத்திலுள்ள இந்திய தூதகர அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: