SI வில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகள் 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நாகர்கோவில்: சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீவிரவாதிகள் இரண்டு பேரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தவ்பிக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்திருந்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்து நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டனர். அதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர்கள், இவர்கள் மீது ஆட்கொணர்வு வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இருப்பதாகவும், போலீஸ் கஸ்டடியில் இவர்களை கொடுப்பதற்கு பாதுகாப்பு இல்லை என்றும் வாதிட்டனர். தொடர்ந்து, நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களை ஆஜர்படுத்துமாறு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இதன் பேரில் இன்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். தற்போது போலீசார் 28 நாட்கள் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. அந்த துப்பாக்கி எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்? மேலும் இவர்களுடன் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? இவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள்? எப்படி எல்லாம் திட்டம் தீட்டினார்கள்? என்பது குறித்த விசாரணை நடத்துவதற்காக போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு இருவரையும் அழைத்து சென்று எவ்வகையில் கொலை நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணைகள் நடத்தவுள்ளனர்.

Related Stories: