மலேசியாவில் பொறியாளர் வேலைக்குச் சென்ற மகனை சிறையிலிருந்து மீட்டுத்தாருங்கள்: மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தாய் கோரிக்கை

ராமநாதபுரம்: மலேசியாவில் பொறியாளர் வேலைக்குச் சென்ற மகனை சிறையிலிருந்து மீட்டுத்தருமாறு அவரது தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது மகன் அஜித்குமார்(24). இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்திருந்தார். இவருக்கு மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக பட்டணம் காத்தான் பகுதியைச் சேர்ந்த இளங்கோ-கண்ணகி தம்பதி கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் 85 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் வீரலட்சுமி. இதையடுத்து அஜித்குமாரை கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, ஜனவரி 6ம் தேதி போலி விசா வைத்திருப்பதாகக் கூறி மலேசியா போலீசார் அஜீத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அஜித்குமாரின் தாயார் வீரலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றினை கொடுத்தார். அதில், “என் மகன் குறித்து ஏஜென்டிடம் கேட்டபோது எவ்வித பதிலும் சொல்லவில்லை. மலேசியாவில் கைது செய்யப்பட்ட எனது மகனை மீட்டுத் தர உதவ வேண்டும். மேலும், போலி விசா வழங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். பின்னர், விரைவில் அஜித்குமாரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Related Stories: