ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன், அத்திட்டத்தின் சாதக பாதகங்களை மத்திய அரசு மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்: விஜயகாந்த் ட்வீட்

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன், அத்திட்டத்தின் சாதக பாதகங்களை மத்திய அரசு மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காவிரிப் படுகையை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து  மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.  பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும்  விவசாயிகள்,  பொதுமக்கள் சாகும்வரை போராட்டம், வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு  அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதேநேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்  கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை. ஆனால் இதற்கு மாறாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஹைட்ரோகார்பன்  ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர்  கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்: இந்தத் திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதனால் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன் இந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்களை மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்தி, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி விளக்கம் கொடுக்க வேண்டும்.

மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகத்தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டமாக இருக்கும். எனவே மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: